India

“ஆசாதி முழக்கம் எழுப்பிய மாணவர்கள் மீது தேசவிரோத வழக்கு பதிவு” : உ.பி-யில் தொடரும் அராஜகம்!

உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியா மாவட்டத்தில் கே.எஸ்.சாகேட் டிகிரி என்ற அரசு கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர் பேரவைத் தேர்தல் வைக்க கோரி மாணவர்கள் அடிக்கடிப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், கடந்த வாரம் முன்னாள் மாணவர் பேரவைத் தலைவர் கிருஷ்ணா யாத்வ் தலைமையில் மாணவர்கள் சிலர் கல்லூரி முதல்வரை சந்தித்து இந்தாண்டு மாணவர் பேரவைத் தேர்தலை நடத்த அனுமதிக்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

அதற்கு கல்லூரி முதல்வர் மறுப்புத் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் முதல்வருக்கும், கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக முழக்கம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சுமித் திவாரி, ஷேஷ் நாராயண் பாண்டே, இம்ரான் ஹாஷ்மி, சாத்விக் பாண்டே, மோஹித் யாதவ், மனோஜ் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தேசவிரோத வழக்கு (Sedition) தொடரப்பட்டது.

இந்த மாணவர்கள் தேசவிரோத முழக்கங்களை எழுப்பினார்கள் என்று கல்லூரியின் முதல்வரே அளித்த புகாரின் பேரின் இந்திய தண்டனைச் சட்டம் 124-A,147 மற்றும் 506 ஆகிய பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என காவல்துறையின் தரப்பில் கூறப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இதுகுறித்து கல்லூரி முதல்வர் அளித்த பேட்டியில், “கல்லூரி வளாகத்தில் தேச விரோத முழக்கங்கள்எழுப்பப்பட்டு வருகின்றன. ராமஜென்மபூமி இடம் அருகில் இருக்கும் இடத்தில், டெல்லி ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில் எழுப்பப்படும் ‘விடுதலை’ முழக்கங்களை (azadi) நான் எப்படி இங்கு அனுமதிக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.

இதனையடுத்து முதல்வரின் குற்றச்சாட்டை மறுத்து முன்னாள் மாணவர் பேரவைத் தலைவர்களில் ஒருவரான கிருஷ்ணா யாதவ் பதிலளித்துள்ளார். அதில், “கல்லூரி பேரவைத் தேர்தலை நடத்துமாறு கூறியதற்காகவே மாணவர்கள் மீது தேசவிரோத வழக்கு தொடரப்பட்டுள்ளது.

10,000 பேர் பயிலும் மிகப்பெரிய கல்லூரியில், 2 ஆண்டுகளாக மாணவர் பேரவைத் தேர்தல் நடத்தவில்லை. கடந்த ஆண்டு ராமர் கோயில் விவகாரம் காரணமாக தேர்தல் இல்லை என்றார்கள், மாணவர்களும் சரி என்று ஒப்புக்கொண்டார்கள். ஆனால், இப்போது வகுப்புகள் நடக்கும் போது, பேரவைத் தேர்தலை நடத்துவதில் கல்லூரி நிர்வாகத்திற்கு என்ன சிக்கல் இருக்கிறது?

இதுபற்றி மாணவர்கள் கேள்வி எழுப்பினார்கள். அப்போது, கல்லூரி முதல்வரிடமிருந்தும் தான் விடுதலை வேண்டும் என்று கோஷமிட்டார்கள். ஆனால், முதல்வரோ அதனை தேசவிரோதம் என்று திரித்துக் கூறுகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: சரக்கு ஆட்டோவில் முதல்வரின் பிரச்சாரத்திற்கு சென்றவர்களின் வாகனம் விபத்து: ஒருவர் பலி; 28 பேர் படுகாயம்!