India

இந்தியாவுக்குள் வந்தது பிரிட்டன் ரிட்டன் கொரோனா.. தமிழகத்தில் ஒருவர் உட்பட 7 பேருக்கு தொற்று பாதிப்பு..!

கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் ஓராண்டு காலமாக கடுமையான பாதிப்புகளை சந்தித்து வந்து கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு வாழ்க்கையை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கும் வேளையில் பிரிட்டன் நாட்டில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த வீரியமிக்க கொரோனா தொற்றால் உலக நாடுகள் மீண்டும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளது.

இங்கிலாந்தில் நாட்டில் கண்டறியப்பட்ட மரபணு மாற்றம் பெற்ற கொரோனா தொற்று ஐரோப்பிய ஒன்றியங்களாக ஜெர்மனி, டென்மார்க், நெதர்லாண்ட், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து மற்றும் கனடா, ஜப்பான், லெபனான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் பரவியுள்ளது.

இதற்கிடையே இந்தியாவில் கடந்த டிசம்பர் 23ம் தேதியில் இருந்து 31ம் தேதி வரையில் தற்காலிகமாக இங்கிலாந்தில் இருந்து விமானங்கள் வந்து செல்ல தடை விதித்திருந்தது மத்திய அரசு. இருப்பினும் நவம்பர் 25ம் தேதியில் இருந்து டிசம்பர் 23ம் தேதி வரையில் இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு பல்வேறு வழித்தடங்கள் வழியாக வந்த 33 ஆயிரம் பேரில் 114 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டது.

அவர்களது ரத்த மற்றும் சளி மாதிரிகள் புனே ஆய்வகத்துக்கு அனுப்பி ஆய்வு மேற்கொண்டதில், பெங்களூரில் 3 பேர், ஹைதராபாத்தில் 2 பேர் மற்றும் புனேவில் ஒருவர் என 6 பேருக்கு உருமாற்றம் அடைந்த வீரியமிக்க கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் தனித்தனி அறையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், அவர்களுடன் தொடர்பில் இருந்த உறவினர்கள், நண்பர்கள், சக பயணிகள் என அனைவரது விவரங்களும் சேகரிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு வீரியமிக்க கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். மேலும் 16 பேரின் முடிவுகள் இன்னும் வரவில்லை எனக் கூறியுள்ளார். பிரிட்டனில் இருந்து வந்தவர்கள் அனைவரும் முறையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் புதிய ரக கொரோனா பரவும் வாய்ப்பு குறைவானது என தெரிவித்துள்ளார்.

Also Read: பீதியடைய வைக்கும் புதிய கொரோனா: அதிரவைக்கும் கூடுதல் அறிகுறிகள்.. இங்கிலாந்து சுகாதாரத்துறை எச்சரிக்கை!