India
“பிரதமரே பொய்களைப் பேசுவது நாட்டிற்கு நல்லதல்ல; உண்மையை பேச வேண்டும்”: மோடிக்கு விவசாய சங்கங்கள் அறிவுரை!
மத்திய பா.ஜ.க அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த 31 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்யவேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்காததால், 5ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததுள்ளது. அதன்பின்னர் விவசாயிகள், அரசாங்கத்தின் பேச்சுவார்த்தை அழைப்புக்கு செவிசாய்க்காமல் இருந்து வந்தனர்.
இந்நிலையில், 29-ம் தேதி பேச்சுவார்த்தைக்கு தயார் என்று மத்திய அரசுக்கு விவசாயிகள் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும், குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக பேச்சு நடத்த வேண்டும், மின்சார சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் மற்றும் காற்று மாசு சட்டத்திலிருந்து விவசாயிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளனர்.
இந்த முக்கிய அம்சங்கள் தொடர்பாக பேச்சு நடத்த மத்திய அரசு தயார் என்றால், 29-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். அதுமட்டுமல்லாது, டிசம்பர் 30-ம் தேதி டெல்லி எல்லைகளில், டிராக்டர் பேரணி நடத்த இருப்பதாக விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளனர்.
மேலும், டெல்லி, ஹரியானா மாநில பொதுமக்கள் இந்த ஆண்டு புத்தாண்டை, போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் கொண்டாட வரவேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளனர். இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த விவசாய சங்கங்களின் போராட்டக்குழு,“பிரதமர் பொய்களைப் பேசினால் அது நாட்டிற்கு நல்லதல்ல; பிரதமர் உண்மை பேசி வலிமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளனர்.
அதுமட்டுமின்றி, போராட்டத்தின் ஒருபகுதியாக, இன்று காலை 11 மணிக்கு பிரதமரின் மன் கி பாத் நிகழ்ச்சியின் போது விவசாயிகள் மணியடித்து எதிர்ப்பினை தெரிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 29-ம் தேதி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் 30-ம் தேதி எல்லைகளில் டிராக்டர் பேரணி நடத்தி போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாய சங்கங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் விதமாக, 450 டிராக்டர்கள் மற்றும் பேருந்துகளில் மேலும் 14 ஆயிரம் பஞ்சாப் மாநில விவசாயிகள் டெல்லி நோக்கி புறப்பட்டுள்ளதாக பாரத கிசான் சங்கம் கூறியுள்ளது. இந்நிலையில், டெல்லி சிங்கு எல்லையில், கடும் குளிரிலும் விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் இதுவரை 40 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
Also Read
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!