India

“பிரதமரின் குற்றச்சாட்டில் உண்மையில்லை” : பிரதமர் மோடிக்கு போராட்டக்குழு மற்றும் எதிர்க்கட்சிகள் கண்டனம்!

மத்திய பா.ஜ.க அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த 31 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்யவேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்காததால், 5ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததுள்ளது. அதன்பின்னர் விவசாயிகள், அரசாங்கத்தின் பேச்சுவார்த்தை அழைப்புக்கு செவிசாய்க்காமல் போராடி வருகின்றனர்.

மேலும், சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள அரசு தயாராக இருப்பதாகவும், பேச்சுவார்த்தைக்கு தயார் என்றால் தெரிவிக்கும்படியும் கூறி மத்திய அரசு எழுதிய கடிதத்தையும் விவசாயிகள் நிராகரித்துள்ளனர்.

மேலும், உத்தரவாத விலை கோரும் எங்கள் கோரிக்கை அப்படியே இருக்கிறது. இதுவரை மத்திய அரசு எழுதிய கடிதங்களில், அவர்கள் எங்கள் கருத்துகளை புரிந்துகொண்டதாக தெரியவில்லை என விவசாய அமைப்பின் நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், பிரதமர் மோடி நேற்றை தினம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அரசியல் நோக்கத்திற்காக, தினசரி தங்களின் கோரிக்கைகளை மாற்றி வருவதாக குற்றம் சாட்டினார்.

பிரதமர் மோடியின் இந்த குற்றச்சாட்டை விவசாய சங்கங்களின் போராட்டக்குழு மறுத்துள்ளது. பிரதமர் மோடியின் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றும் விவசாயிகளால் நடத்தப்பட்டும் இந்த போராட்டம் அரசியல் சார்பற்றது என்றும் விவசாய சங்கங்களின் போராட்டக்கு மறுப்புத் தெரிவித்துள்ளது.

இதனிடையே பிரதமர் மோடி விவசாயிகளின் போராட்டத்தை திசை திருப்ப முயற்சிப்பதாகவும் தி.மு.க, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட 11 எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக, காங்கிரஸ், தி.மு.க, தேசியவாத காங்கிரஸ், சி.பி.ஐ.எம் மற்றும் சி.பி.ஐ உள்ளிட்ட 11 எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், வேளாண் சட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை பிரதமர் மோடி பேசி வருவதாக கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், வேளாண் சட்டங்கள் குறித்து பொய் பிரச்சாரங்களில் ஈடுபடுவது யார்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Also Read: “தாகூரின் கருத்தை உள்வாங்கிக் கொள்ளாமல் பிரதமர் மோடி திரித்துக் கூறுகிறார்” : மே.வங்க அமைச்சர் சாடல்!