India

“உங்கள் பார்வை தவறானது; நாங்கள் அரசியல் கட்சிகளை சாராதவர்கள்” : பிரதமர் மோடிக்கு விவசாயிகள் கடிதம்!

மத்திய பா.ஜ.க அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த 25 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்யவேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்காததால், 5ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததுள்ளது. மேலும், சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள அரசு தயாராக இருப்பதாகவும் பேச்சுவார்த்தைக்கு தயார் என்றால் தெரிவிக்கும்படியும் கூறி மத்திய அரசு எழுதிய கடிதத்தையும் விவசாயிகள் நிராகரித்துள்ளனர்.

மேலும் விவசாயிகள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்த வேண்டாம் என்றும் மத்திய அரசுக்கு விவசாய சங்கங்கள் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளனர். இந்தச் சூழலில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் அனைத்து மொழிகளிலும் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தனது உணர்வுகளை வேளாண் சகோதர சகோதரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வெளிப்படுத்தியுள்ளார். இயல்பான பேச்சுவார்த்தைக்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உழவர் பெருமக்கள் அதைப் படிக்க வேண்டுகிறேன். இந்தத் தகவலை பெருமளவில் பகிர வேண்டும் என பொதுமக்களை கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அகில இந்திய விவசாய சங்க ஒருங்கிணைப்புக் குழு பிரதமர் மோடி மற்றும் வேளாண் அமைச்சர் தோமர் ஆகியோருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது.

அந்தக் கடிதத்தில், “மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் எதிர்க்கட்சிகளால் வடிவமைக்கப்படுவதாக அரசாங்கம் கருதுவது தவறானது. உண்மை என்னவென்றால், விவசாயிகளின் போராட்டத்தால், அரசியல் கட்சிகள் தங்கள் பார்வைகளை மாற்றும் நிலை ஏற்பட்டது.

அரசியல் கட்சிகள் போராட்டத்தை தூண்டிவிடுவதாக பிரதமர் கூறுவது தவறானது. போராட்டம் நடத்தும் விவசாய சங்கங்கள், அமைப்புகளின் எந்த ஒரு கோரிக்கையும் அரசியல் கட்சியுடன் இணைக்கப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இன்று நாடுமுழுவதும் டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அதேவேளையில், டெல்லியில் கடுமையான குளிர் வாட்டியபோதும் விவசாயிகளின் மன உறுதியில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “டெல்லியில் குளிர், விபத்து காரணமாக 20 விவசாயிகள் பலி” : அரசின் பிடிவாதத்தால் தொடரும் போராட்டம்!