India

பஜ்ரங்தள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை - பா.ஜ.க ஆதரவு ஃபேஸ்புக் : அம்பலப்படுத்திய வால் ஸ்ட்ரீட் ஜர்னல்!

இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக பஜ்ரங்தள் வன்முறைகளை தூண்டுகிறது என ஃபேஸ்புக்கின் உள் பாதுகாப்பு பிரிவினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

ஆனால், பஜ்ரங்தள் தொடர்புடைய ஃபேஸ்புக் கணக்குகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கு பஜ்ரங்தள் மீதான ஃபேஸ்புக் நிறுவனத்தின் அச்சமே காரணம் என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் குற்றம்சாட்டியுள்ளது.

இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் பஜ்ரங்கள் அமைப்பினர் ஒரு கிறிஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல் நடத்தினர். பஜ்ரங்தள் வெளியிட்ட மதவெறுப்பு நிறைந்த அந்த வீடியோ 2.5 லட்சம் பார்வைகளைப் பெற்றும் ஃபேஸ்புக் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பஜ்ரங்தள் மீது நடவடிக்கை எடுத்தால், இந்தியாவில் தமது நிறுவன ஊழியர்களுக்கும், தொழில் நடவடிக்கைகளுக்கும் ஆபத்து ஏற்படலாம் என்பதாலேயே ஃபேஸ்புக் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று வால் ஸ்ட்ரீட் கூறியுள்ளது.

மேலும், ஃபேஸ்புக் செயல்படும் பல நாடுகளில் அதற்கு ஊழியர்கள் இல்லை. ஆனால், இந்தியாவில் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு 5 அலுவலகங்கள் செயல்படுகின்றன. அங்கு பணியாற்றும் நூற்றுக்கணக்கான ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனக்கருதியே நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஒரு ஃபேஸ்புக் உள்வட்டார தகவல் குறிப்பிடுகிறது.

முன்னதாக, பா.ஜ.கவினரின் பதிவுகளையோ, கணக்குகளையோ நீக்கினால் இந்தியாவில் தொழில் செய்வதில் பிரச்னை ஏற்படும் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும் ஃபேஸ்புக் இந்திய பொதுகொள்கை பிரிவு தலைவர் அங்கி தாஸ் கூறியதாக தகவல் வெளியானது. பின்னர் பல்வேறு சர்ச்சைகளைத் தொடர்ந்து அவர் பதவி விலகினார்.

ஆனாலும், ஆளும் பா.ஜ.க அரசின் ஆதரவு பெற்ற வலதுசாரி அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை ஃபேஸ்புக் முற்றிலுமாகத் தவிர்த்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ் வெறுப்புணர்வு பேச்சுகளை ஆதரித்த இந்தியாவின் ஃபேஸ்புக் நிர்வாகி பதவி விலகல்!