India

மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தயார் ஆனால் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற முடியாது - மத்திய அரசு பிடிவாதம்!

பொது நிறுவனங்களைப் போன்று விவசாயத்தையும் கார்ப்பரேட் வசம் தாரைவார்க்கும் வகையில் மோடியின் பா.ஜ.க அரசு மேற்கொண்டுள்ள புதிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

அவ்வகையில், பஞ்சாப், ஹரியானா, மத்திய பிரதேசம் மற்றும் உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் தலைநகர் டெல்லியில் கடந்த 15 நாட்களாக வேளாண் சட்டங்களுக்கு எதிராக தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

வேளாண் சட்டங்களையும், மின்சார சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களையும் ரத்து செய்யவேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்காததால், 5ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததுள்ளது.

மத்திய அரசு தங்களது கோரிக்கைகளை ஏற்கும் வரையில் போராட்டம் தொடரும் என விவசாயிகள் சங்கத்தினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். மேலும் அடுத்தகட்ட போராட்டங்கள் குறித்தும் திட்டமிட்டு வருகின்றனர்.

அதன்படி, வருகிற டிசம்பர் 14ம் தேதி வேளாண் சட்டங்களை திரும்பப் பெறாததைக் கண்டித்து நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உள்ள பாஜக அலுவலகங்களை முற்றுகையிட்டுப் போராடவும் விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு வரத் தயார். ஆனால் சட்டங்கள் திரும்பப் பெறப்படாது என்றுக் கூறியுள்ள விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மீண்டும் விவசாயிகளுடன் பேச்சுவாரத்தை நடத்த தயார் என்றும் கூறியுள்ளார்.

மேலும், இந்த சட்டங்களால் குறைந்தபட்ச ஆதாய விலை பாதிக்கப்படாது, ஏ.பி.எம்.சி சந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படாது என்று விளக்கமளித்துள்ள அவர், அதற்கான எழுத்து மூலமான உத்தரவாதம் வழங்கவும் தயார் எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, இன்று இரவுக்குள் விவசாயிகளின் கோரிக்கைக்கு செவிகொடுத்து பா.ஜ.க அரசு வேளாண் சட்டங்களைப் திரும்பப்பெறவில்லை என்றால் நாடுமுழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என இன்றைய விவசாயிகள் கூட்டத்தில் அதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக எஸ்.கே.எம் விவசாய சங்க தலைவர் பூட்டா சிங் தெரிவித்துள்ளார்.

Also Read: “பா.ஜ.க அலுவலகங்கள் முற்றுகை, அம்பானி நிறுவனங்கள் புறக்கணிப்பு”- போராட்டத்தை தீவிரப்படுத்தும் விவசாயிகள்!