India
சு.வெங்கடேசன் கடிதம் எதிரொலி: கிளார்க் CUT OFF குறித்து விளக்கமளிக்க SBIக்கு நிதியமைச்சகம் அறிவுறுத்தல்!
ஸ்டேட் வங்கி கிளார்க் பணியிடங்களுக்கான துவக்க நிலைத் தேர்வு முடிவுகளில் வெளியிடப்பட்ட கட் ஆஃப் மதிப்பெண்கள் ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீடு அமலாக்கம் குறித்து சந்தேகங்களை எழுப்பியிருந்தது. அது குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) நிதியமைச்சர், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
நிதி அமைச்சகம், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், அமைச்சரவை செயலாளர் ஆகியோருக்கு 22.10.2020 அன்று சு.வெங்கடேசன் எழுதிய கடிதத்தில், பொதுப் பிரிவினருகான கட் ஆஃப் 62, ஓ.பி.சி, எஸ்.சி பிரிவினர்க்கும் அதே 62 மதிப்பெண்களே கட் ஆஃப் என அம்முடிவுகள் வெளி வந்திருந்தன. எஸ்.டி பிரிவினர் கட் ஆஃப் 59.5 ஆகும். அதை விட பொருளாதார ரீதியாகப் பின் தங்கியோர் (EWS) கட் ஆஃப் குறைவாக 57.75 என இருந்தது. இக் கட் ஆஃப் விவரங்கள் சமுக யதாரத்தங்களோடு பொருந்துவதாக இல்லாததால் இட ஒதுக்கீடு முறையாக அமலாகிறதா என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.
தனியர்களுக்கே அவரவர் கட் ஆஃப் விவரங்கள் அனுப்பப்படுவதால் இட ஒதுக்கீடு அமலாகிறதா என்பதற்கான சமூகத் தணிக்கைக்கான வாய்ப்பின்றி உள்ளது என்றும் சுட்டிக் காட்டியிருந்தார். எல்லோரின் கட் ஆஃப் விவரங்களும் தேர்வு பெற்றோர் பட்டியலோடு பொது வெளியில் அறிவிக்கப்பட வேண்டுமென்றும் கோரி இருந்தார்.
இந்த தேர்வுகளை நடத்தும் ஐ.பி.பி.எஸ் (IBPS) அமைப்பு ஆர்.டி.ஐ உள்ளிட்ட சமூகக் கண்காணிப்பிற்கு உட்படுவதில்லை என்பதை சுட்டிக் காட்டி, அரசின் ஆணைகளைக் கடைப்பிடிக்க வேண்டிய எந்தவொரு அமைப்பும் இப்படி சமூகக் கண்காணிப்பிற்கு அப்பாற்பட்டதாக எப்படி இருக்க முடியும்? என்றும் கேள்வி எழுப்பி இருந்தார்.
பொதுப் பட்டியல் என்பது இடஒதுக்கீட்டுப் பிரிவினரையும் உள்ளடக்கியதுதான்; அவர்கள் பொதுப் பட்டியல் கட் ஆஃப் மதிப்பெண்களுக்கு மேலாகப் பெறும் போது பொதுப் பட்டியலில் இடம் பெறுவார்கள் என்ற நெறி கடைப்பிடிக்கப்பட்டுள்ளதா என்றும் எவ்வாறு பொது, ஓ.பி.சி, எஸ்.சி பிரிவினர் கட் ஆஃப் ஒரே அளவில் உள்ளன என்றும் கேட்டிருந்தார். இப் பணி நியமனங்களுக்கு வரப் பெற்றுள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை, பிரிவு வாரியான தகவல்களையும் கேட்டிருந்தார்.
அவர் எழுதிய கடிதங்களுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் அளித்துள்ளனர். அதில், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் தவார்சந்த் கெலாட், சு.வெங்கடேசன் எம்.பியின் கடிதத்தை நிதியமைச்சகத்திற்கு 23.10.2020 அன்று அனுப்பி அது குறித்து மேல் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி இருந்தார். நிதி இணை அமைச்சர் அனுராக்சிங் தாகூர் நவம்பர் 10 அன்று இது குறித்து சம்பந்தப்பட்ட துறைகளுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில் நவம்பர் 23 அன்று மத்திய நிதி இணை அமைச்சர் அனுராக்சிங் தாகூர், ஸ்டேட் வங்கி சேர்மனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அக் கடிதத்தில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சரிடமிருந்து வந்துள்ள கடிதத்தையும், சு. வெங்கடேசன் எம்.பி கடிதத்தையும் குறிப்பிட்டு நவம்பர் 30க்குள்ளாக விதிகள் சரியாக பின்பற்றப்பட்டுள்ளனவா என்று உரிய நடவடிக்கை எடுத்து பதில் அளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து சு. வெங்கடேசன் தெரிவிக்கையில் "நவம்பர் 30க்குள்ளாக என்று காலக் கெடு நிர்ணயம் செய்து அறிவுறுத்தியுள்ளதால் இன்னும் சில நாட்களிலாவது பதிலை எதிர் பார்க்கிறேன். ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதில் வெளிப்படைத் தன்மையும், கண்காணிப்பும் அரசுத் துறை நிறுவனங்களிடம் இருக்க வேண்டும்" என்றார்.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!