India
டெல்லியில் 10 டிகிரி செல்சியஸ் குளிரிலும் போராட்டத்தைத் தொடரும் விவசாயிகள்: வேடிக்கை பார்க்கும் மோடி அரசு
மோடி அரசின் வேளாண் விரோத கொள்கைகளை எதிர்த்து உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியை நோக்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக போராடும் விவசாயிகளை டெல்லிக்குள் நுழையவிடாதவாறு, உத்தர பிரதேசம், அரியானா எல்லைகளில் கடுமையான முறையில் காவல்துறையினரால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
குறிப்பாக காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகள் மற்றும் வாட்டர் கேனன்கள் மூலமாக குளிர்நீரை பீய்ச்சி அடித்ததும், விவசாயிகள் வாகனங்களில் வருவதைத் தடுக்க வேண்டும் என்பதற்காக அரசாங்கமே சாலைகளில் பள்ளம் தோண்டி வைத்திருந்தது.
மோடி அரசின் தடைகள் அனைத்தையும் விவசாயிகளை எதுவும் செய்ய இயலாமல், கடைசியில் மத்திய பா.ஜ.க அரசு அவர்களைத் டெல்லிக்குள் விடுவதற்கும், போராரியில் உள்ள நிரங்காரி மைதானத்தில் கூடுவதற்கும் அனுமதித்து உள்ளது. பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பஞ்சாப் மற்றும் அரியானாவிலிருந்து டெல்லி எல்லையில் வெள்ளிக்கிழமை காலை வந்து சேர்ந்தனர்.
இந்நிலையில், நேற்று ஹரியானாவில் இருந்து டெல்லி எல்லைக்குள் நுழைய கூடிய அனைத்து எல்லைப் பகுதிகளிலும் தொடர்ந்து விவசாயிகள் அந்தந்த இடங்களிலேயே போராட்டம் நடத்தி வருகிறார்கள். இரவு பகலாக இந்த போராட்டம் வந்து தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதனையடுத்து, விவசாயிகளுடன் பேச்சு நடத்த அரசு தயாராக இருப்பதாகவும், அவர்கள் போராட்டம் நடத்த போலிஸ் அனுமதி வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி உள்ளர். இந்நிலையில், அமித்ஷாவின் அறிவிப்பைத் தொடர்ந்து அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.
மத்திய அரசு 3ம் தேதி பேச்சுவார்த்தை என்று கூறி இருந்தாலும் கூட இதுவரை உறுதியான ஒரு தகவலை தெரிவிக்க வில்லை. விவசாயிகளை பொருத்த அளவில் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அமைச்சர்களை கொண்ட ஒரு குழு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்கள்.
அந்த குழுவிடம் தான் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், மத்திய அரசு இதுவரை திட்டவட்டமான ஒரு அறிவிப்பை வெளியிடவில்லை. இந்த சூழ்நிலையில், இன்றும் 5வது நாளாக போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
டெல்லியில் இருந்து 38 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள புராரி மைதானத்தில் தங்களால் போராட்டம் நடத்த இயலாது. அதில் தங்களை அடைத்து வைத்து திறந்தவெளி சிறையாக மாற்ற முயற்சிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை வைத்துள்ளார்கள்.
ஷிங்கு, காசிபூர், திக்ரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து விவசாயிகள் தேசிய நெடுஞ்சாலைகளில் போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள். இதனிடையே உத்தரப் பிரதேசத்தில் இருந்து டெல்லிக்கு நுழையக்கூடிய காசிப்பூர் எல்லைப்பகுதியில் போலிஸார் கான்கிரீட் கற்களை போட்டு டிராக்டர்கள் உள்ளிட்ட வாகனங்களில் விவசாயிகள் நுழைந்து விடாமல் தடுக்க தடுப்புகளை இன்று காலை முதல் ஏற்படுத்தி வருகிறார்கள்.
இந்த இடத்தில்தான் நேற்று இரவு போலிஸாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த நிலையில், தலைநகர் டெல்லியில் வழக்கமாக, நவம்பர் மாதத்தில் கடும் குளிர் நிலவும் நிலையில், இந்தாண்டு சராசரியாக 10 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை அது அடைந்துள்ளது. இதனால், டெல்லிவாசிகள் குளிரால் நடுநடுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த குளிரையும் பொருட்படுத்தாது விவசாயிகள் வேளாண் சட்டங்களை திரும்ப பெற திறந்தவெளிகளில் இரவு - பகலாக தங்களின் போராட்டத்தைத் தொடர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !