India
“போராடும் விவசாயிகள் மீதான அடக்குமுறைகளைக் கைவிடுக” - தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை!
பா.ஜ.க அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகள் மீதான அடக்குமுறைகளைக் கைவிட வலியுறுத்தியும், அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்துதரக் கோரியும் தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன.
விவசாயத்தை கார்ப்பரேட் மயமாக்கும் வகையிலும், விவசாயிகளை ஒழிக்கும் வகையிலும் பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை விவசாயிகளும், எதிர்க்கட்சிகளும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட 6 மாநில விவசாயிகள் ‘டெல்லி சலோ’ எனும் பெயரில் டெல்லியை நோக்கி மாபெரும் பேரணியை நடத்தி வருகின்றனர்.
அரசுக்கு எதிராக பேரணியில் ஈடுபடும் விவசாயிகள் கூட்டத்தைக் கலைக்கவும், டெல்லி செல்வதைத் தடுக்கவும் போலிஸார் தண்ணீர் பீரங்கிகளைப் பயன்படுத்தினர். கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர். விவசாயிகள் மீது தடியடிப் பிரயோகமும் நடத்தப்பட்டது.
இந்நிலையில் போராடும் விவசாயிகள் மீதான அடக்குமுறைகளைக் கைவிட வலியுறுத்தியும், அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்துதரக் கோரியும் தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
இந்த கூட்டறிக்கையில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, ராஷ்ட்ரிய ஜனதா தள நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் ஜா, சி.பி.ஐ-எம்.எல் கட்சியின் பொதுச் செயலாளர் திபாங்கர் பட்டாச்சார்யா, அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் பொதுச் செயலாளர் தேபப்ரதா பிஸ்வாஸ், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் மனோஜ் பட்டாச்சாரியா ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
எதிர்க்கட்சியினர் விடுத்துள்ள கூட்டறிக்கை வருமாறு:
“கடுமையான அடக்குமுறை, கண்ணீர் புகை குண்டு வீச்சு, பெரிய தீயணைப்பு குழாய்கள் மூலம் தண்ணீர் பீச்சியடிப்பு, சாலையில் தடை, போலீஸார் சாலைத்தடுப்புகள் அமைத்து விவசாயிகளுக்கு எதிராக நடத்திய அடக்குமுறை போரை தொடங்குவது போன்று உள்ளது.
லட்சக்கணக்கான விவசாயிகள் வெற்றிகரகமாக டெல்லியை அடைந்துவிட்டார்கள், அவர்களது தைரியத்துக்கும் துணிவுக்கும் நாங்கள் தலைவணங்குகிறோம். பிற்போக்குத்தனமான விவசாய கொள்கையை எதிர்த்து போராடும் விவசாயிகளுக்கு நாங்கள் தலைவணங்குகிறோம்.
போராடும் விவசாயிகள் அமைதியாக தங்கள் கோரிக்கையை வைக்க டெல்லி நோக்கி வந்த உங்களை தடுக்க முயன்ற மத்திய அரசின் நடைமுறையை பின் வாங்கச்செய்து இன்று ஒரு இடத்தில் போராட அனுமதி பெற்ற வலிமையை பாராட்டுகிறோம்.
அதே நேரம் தற்போது கொடுக்கப்பட்டுள்ள மைதானம் லட்சக்கணக்கான விவசாயிகள் போராட இடமில்லாத வகையில் நெருக்கடியான ஒன்று. ஆகவே போராடும் விவசாயிகளுக்கு டெல்லி ராம்லீலா மைதானத்தை போன்ற பெரிய மைதானம் அல்லது ராம்லீலா மைதானத்தை ஒதுக்கி அவர்கள் அமைதியாக போராட வேண்டிய உணவு, தங்குமிடம் உள்ளிட்டவற்றை அளிக்க வேண்டும்.
உணவுப்பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும், குறைந்தபட்ச ஆதார விலை நீக்கிய, இந்திய வேளாண் துறையை, உணவு வழங்குகிற விவசாயிகளை அழிக்கும் புதிய விவசாய கொள்கையை எதிர்க்கிறோம் என்பதை மீண்டும் பதிவு செய்கிறோம். அதே வேளையில் போராடும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை ஜனநாயக வழியில் தீர்க்க மத்திய அரசு முன்வரவேண்டும்”
இவ்வாறு அந்த கூட்டறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Also Read
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!