India

சிறைபிடிக்கப்பட்ட தமிழக விசைப்படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு : கொந்தளிக்கும் தமிழக மீனவர்கள்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கோட்டைப்பட்டிணத்தில், இலங்கை கடற்ப்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக விசைப்படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதற்க்கு விசைப்படகு மீனவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்திய எல்லைக் கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்ப்படையினர் அவ்வப்போது தமிழக மீனவர்களை தாக்குவதும் அவர்கள் பயன்படுத்திய விசைப்படகுகளை சிறைபிடிப்பதும் வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.

சிறைபிடிக்கப்பட்ட விசைப்படகுகளை இலங்கை காங்கேசன்துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்திலையில் தமிழகத்தை சேர்ந்த சிறைபிடிக்கப்பட்ட 121 விசைப்படகுகளை அழிக்க அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள புதுக்கோட்டை மீனவர்கள், மத்திய மாநில அரசுகள் தலையிட்டு படகுகளை அழிக்காமல் மீட்டெடுக்க நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும், இல்லையெனில் ஒரு விசைப்படகிற்க்கு 15 முதல் 20 லட்சம் நஷ்டஈடு பெற்றுத்தரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதுமட்டுமல்லாது தற்போது, கோடியக்கரை தென்கிழக்கு நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நான்கு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் கொண்டு சென்றதால் மீனவ கிராமங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் இருந்து மாணிக்கம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் 4 மீனவர்கள் கடந்த 7ம் தேதி கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.

நேற்று இரவு கோடியக்கரை தென்கிழக்கு இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நான்கு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் கடற்கரை முகாமுக்கு கொண்டு சென்றனர்.

கைது செய்யப்பட்ட நான்கு மீனவர்களிடம் விசாரணை நடத்தியதில் டீசல் இன்றி நடுக்கடலில் தத்தளித்தது தெரியவந்துள்ளது. நடுக்கடலில் டீசல் இன்றி பரிதவித்த நான்கு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் மீனவ கிராமங்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also Read: மீனவர் பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் அணுகுங்கள் - இலங்கை பிரதமரிடம் கனிமொழி எம்.பி. கோரிக்கை