India

“அக். மாதம் GST ரூ.1 லட்சம் கோடி வசூலானது” : மாநிலங்களுக்கு இழப்பீடு தொகையை இனியாவது மோடி அரசு வழங்குமா?

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், நாடுமுழுவதும் இந்தியாவின் பொருளாதாரமும் படு மோசமான நிலையை எட்டியுள்ளது.

இந்த நிலையில், முதல் முறையாக கடந்த மாதம் ஜி.எஸ்.டி வரி வசூல் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலாகியுள்ளதாக நிதியமைச்கம் தெரிவித்துள்ளது. ஜி.எஸ்.டியைக் கொண்டுவந்த மத்திய மோடி அரசு, ஜி.எஸ்.டி வரி வசூல் மாதந்தோறும் ஒரு லட்சம் கோடியைத் தாண்டவேண்டும் என இலக்கு நிர்ணயித்தது.

ஆனால், இந்தியாவில் நிலவி வந்த பொருளாதார சூழல் காரணமாக ஜி.எஸ்.டி வரி வசூல் சரிவை சந்தித்தது. இந்த சூழலில், மாதந்தோறும் 20ம் தேதிக்குள் ஜி.எஸ்.டி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியது. ஆனால், 20ம் தேதிக்கு பிறகும் மாதாந்திர கணக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதனால், கடந்த அக்டோபர் மாதத்துக்கான ஜி.எஸ்.டி வரி வசூல் ரூ.1,05,155 கோடியாக உயர்ந்தது. இதுவே முந்தைய கடந்த செப்டம்பரில் ஜி.எஸ்.டி வரி ரூ.95,480 கோடியும், ஆகஸ்ட் மாதத்தில் ரூ.86,449 கோடியும் வசூலானது. ஜி.எஸ்.டி வசூல் ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டியது இந்தாண்டின் இதுவே முதல் முறையாகும். அதுமட்டுமல்லாது கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில், வசூலான 95,379 கோடி ரூபாயைவிட, 10 சதவீதம் அதிகமாகும்.

ஜி.எஸ்.டி அமல்படுத்தும்போது மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பிடை சரிசெய்ய, 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்க மத்திய அரசு ஒப்புக்கொண்டது. ஆனால், மாநில அரசுக்கு ஜி.எஸ்.டி இழப்பீடு மூலம் பட்டை நாமம் போட்டுள்ளது மத்திய அரசு.

குறிப்பாக, கடந்த ஆண்டுக்கு தரவேண்டிய ஜி.எஸ்.டி வரி இழப்பீடு ரூபாய் 1லட்சம்.. 2 லட்சம் அல்ல 12,000 கோடி ரூபாய் வரி இழப்பீடு தொகையை தமிழகத்திற்கு தராமல் மத்திய அரசு இழுத்தடித்துக்கொண்டு இருக்கிறது.

2017-ல் இருந்து இன்று வரை ஜி.எஸ்.டி இழப்பீடு வழங்கக் கோரி மத்திய நிதி அமைச்சருக்கு கடிதம் எழுதி வருகிறோம் என ஒவ்வொரு முறையும் தமிழக முதல்வர் சொல்லிக்கொண்டே இருந்தாரே தவிர, ஒரு பைசா கூட தமிழகத்திற்கு இன்று வரை வர வில்லை.

தற்போது கொரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை காரணமாக இந்த ஆண்டு மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டு தொகையில் ரூ2.35 லட்சம் கோடி அளவுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், அனைத்து மாநில அரசுகளும் ரிசர்வ் வங்கி அல்லது வெளிசந்தையில் இருந்து கடன் வாங்குமாறு மத்திய அரசு கூறியது.

ஏற்கனவே, தமிழகத்தின் மொத்த கடன் 5 லட்சம் கோடி; நடப்பாண்டு நிதி பற்றாக்குறை மட்டும் 85,000 கோடி; கடந்த 10 ஆண்டுகளாக தமிழகம் அனைத்து துறைகளிலும், பொருளாதாரத்தில் அதலபாதாளத்திற்குச் சென்றுள்ள நிலையில், 12,000 கோடியை ஜி.எஸ்.டி இழப்பீட்டு தொகையை வாங்காமல், மத்திய அரசு முன்வைத்த கடன் வாங்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

இந்நிலையில் தற்போது வசூலான தொகையில் இருந்து இனியாவது நிலுவை தொகையை மத்திய அரசு வழங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே தமிழகம் 5 லட்சம் கோடி கடனில் மூழ்கி உள்ள நிலையில், மீண்டும் கடன் பெற்றால், வரும் காலத்தில் தமிழகத்தின் மண்ணுக்கு அடியில் கஜானாவை தேடவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்கின்றனர் பொருளதார நிபுணர்கள்.

Also Read: “ஜி.எஸ்.டி இழப்பீடு கிடையாது” : மாநிலங்களுக்கு பட்டை நாமம் போடும் மத்திய அரசு - கடனில் மூழ்கும் தமிழகம்!