India
உ.பி-யில் தலித் சிறுமி 3 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை : போலிஸ் புகாரை ஏற்காததால் தற்கொலை!
பா.ஜ.க ஆளும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் சிறுமிகள், இளம்பெண்கள் குண்டர்கள் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்கின்றன. இச்சம்பவங்கள் நாடு முழுவதும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளன.
உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மற்றும் பல்ராம்பூரில் கும்பல் பாலியல் பலாத்காரத்தால் 2 பெண்கள் கொல்லப்பட்டனர். இதனிடையே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உ.பி.யில்தான் அதிகம் என தேசிய குற்றப்பதிவு ஆவணக் காப்பகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 15 வயது தலித் சிறுமியின் புகாரை, போலிஸார் ஏற்க மறுத்ததால், சிறுமி தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் சித்ரகூட் மாவட்டத்தில் உள்ள மணிக்பூர் கிராமத்தை சேர்ந்த 15 வயது தலித் சிறுமியை கடந்த 8ம் தேதி மூன்று பேர் கொண்ட கும்பல் கை, கால்களை கட்டுப்போட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி காவல்நிலையம் சென்று புகார் கொடுத்துள்ளார். ஆனால், புகாரை போலிஸார் ஏற்க மறுத்ததால், மனமுடைந்த சிறுமி, நேற்று முன் தினம் வீட்டில் இருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஆனால், பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிறுமி தரப்பில் இருந்து யாரும் புகார் கொடுக்கவில்லை என போலிஸார் மறுத்துள்ளனர். இந்நிலையில், சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், கிஷான் உபாத்யாய், ஆஷிஷ், சதீஷ் ஆகியோர் மீது இந்திய குற்றவியல் தண்டனை சட்டம், எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலிஸார், அவர்களை கைது செய்தனர்.
இந்நிலையில், புகாரை வாங்க மறுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக கார்வி காவல் நிலைய அதிகாரி ஜெய்சங்கர் சிங், உதவி ஆய்வாளர் அனில் சாகு ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக சித்ரகூட் மாவட்ட எஸ்.பி அன்கிட் மிட்டல் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!