India

ஜெ.மரணம்: முடங்கிக் கிடக்கும் ஆறுமுகசாமி ஆணையம் மீண்டும் விசாரணையைத் தொடங்க நீதிமன்றம் அனுமதி வழங்குமா?

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில், அப்பல்லோ மருத்துவமனை குற்றம்சாட்டியுள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழக அரசு அமைத்து உத்தரவிட்டது. இந்த ஆணையத்தின் விசாரணை தொடர்ந்து தாமதிக்கப்பட்டு வரும் நிலையில், மூன்றாண்டுகளைக் கடந்தும், எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலை உள்ளது.

இதற்கிடையே, மருத்துவ நிபுணர்கள் இல்லாத ஆறுமுகசாமி ஆணையத்தின் முன்பாக ஆஜராகி விளக்கம் அளிக்கமுடியாது. ஆணையம் செயல்பட தடைவிதிக்க வேண்டும் என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தாக்கல் செய்த மனுவை கடந்த ஆண்டு விசாரித்த உச்சநீதிமன்றம் ஆணையத்துக்கு இடைக்காலத் தடை விதித்தது.

உச்சநீதிமன்றம்

இந்த தடையை நீக்கக் கோரி தமிழக அரசு இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது. அதற்கு பதிலளித்துள்ள அப்பல்லோ மருத்துவமனை, ஜெயலிலிதாவின் மரணம், வழங்கப்பட்ட சிகிச்சை ஆகியவை குறித்து மருத்துவ நிபுணர்களும் உள்ளடங்கிய குழுவால் மட்டுமே முழு விசாரணை செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அதன் வரம்பை மீறுவதாகவும், தவறான எண்ணத்துடனும், முன்னரே தீர்மானிக்கப் பட்டதாகவும் உள்ளது எனவும் அப்பல்லோ மருத்துவமனை குற்றம்சாட்டியுள்ளது.

இந்நிலையில், இதனை எதிர்த்து தமிழக அரசு அண்மையில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. அதில், ஜெயலலிதா மரணத்தை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ஆணையம் இதுவரை 154 சாட்சியங்களை விசாரித்துள்ளது. மாதம் தோறும் 4 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் இந்த ஆணையத்திற்கு தமிழக அரசு செலவிட்டு வருகிறது.

எட்டு முறை ஆணையத்தின் காலாவதி நீட்டிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே மிக முக்கியமான இந்த ஆணையம் தொடர்ந்து செயல்பட உச்ச நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும். ஆணையம் செயல்படுவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று தொடர்ந்த வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

ஆனால் தடையை நீக்கக் கூடாது என்று அப்பல்லோ மருத்துவமனை மீண்டும் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், ஆறுமுகசாமி ஆணையம் மீண்டும் செயல்பட உச்சநீதிமன்றம் அனுமதி அளிக்குமா இல்லையா என்பது நாளை தெரியவரும்.

Also Read: ஜெ.மரணம்: ”ஆறுமுகசாமி ஆணைய விசாரணையால் உண்மையைக் கண்டறிய முடியாது”- அப்பல்லோ மருத்துவமனை கடும் விமர்சனம்!