India
ஜெ.மரணம்: ”ஆறுமுகசாமி ஆணைய விசாரணையால் உண்மையைக் கண்டறிய முடியாது”- அப்பல்லோ மருத்துவமனை கடும் விமர்சனம்!
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில், அப்பல்லோ மருத்துவமனை குற்றம்சாட்டியுள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழக அரசு அமைத்து உத்தரவிட்டது. இந்த ஆணையத்தின் விசாரணை தொடர்ந்து தாமதிக்கப்பட்டு வரும் நிலையில், மூன்றாண்டுகளைக் கடந்தும், எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலை உள்ளது.
இதற்கிடையே, மருத்துவ நிபுணர்கள் இல்லாத ஆறுமுகசாமி ஆணையத்தின் முன்பாக ஆஜராகி விளக்கம் அளிக்கமுடியாது. ஆணையம் செயல்பட தடைவிதிக்க வேண்டும் என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தாக்கல் செய்த மனுவை கடந்த ஆண்டு விசாரித்த உச்சநீதிமன்றம் ஆணையத்துக்கு இடைக்காலத் தடை விதித்தது.
இந்த தடையை நீக்கக் கோரி தமிழக அரசு இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது. அதற்கு பதிலளித்துள்ள அப்பல்லோ மருத்துவமனை, ஜெயலிலிதாவின் மரணம், வழங்கப்பட்ட சிகிச்சை ஆகியவை குறித்து மருத்துவ நிபுணர்களும் உள்ளடங்கிய குழுவால் மட்டுமே முழு விசாரணை செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளது.
மேலும், ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அதன் வரம்பை மீறுவதாகவும், தவறான எண்ணத்துடனும், முன்னரே தீர்மானிக்கப் பட்டதாகவும் உள்ளது எனவும் அப்பல்லோ மருத்துவமனை குற்றம்சாட்டியுள்ளது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் திங்கட்கிழமை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
ஜெயலலிதா மரணத்தையடுத்து நிகழ்ந்த திருப்பங்களால் ஆட்சிக்கு வந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு, தங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் மறைவு குறித்த மர்மத்தை மறைப்பதிலேயே குறியாய் இருப்பதாக குற்றம்சாட்டப்படும் நிலையில், அப்பல்லோ நிர்வாகம் ஆறுமுகசாமி ஆணையத்தை கடுமையாகச் சாடியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!