India

ஹத்ராஸ் வழக்கில் கைது செய்யப்ப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க ஆதரவாளர்கள் போராட்டம்!

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரைச் சேர்ந்த 19 வயது பட்டியலின பெண் 4 பேர் கொண்ட கும்பலால் கடுமையாகத் தாக்கப்பட்டு கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் அந்தப் பெண் உயிரிழந்தார்.

இதையடுத்து, அந்தப் பெண்ணின் உடலை வலுக்கட்டாயமாக ஹத்ராஸுக்கு கொண்டு வந்த உ.பி போலிஸார் இரவோடு இரவாகக் தகனம் செய்தனர். போலிஸார் வலுக்கட்டாயமாக உடலைத் தகனம் செய்ததாக பலியான பெண்ணின் குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்தக் கொடூரச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட 4 பேருக்கும் உரிய தண்டனை வழங்கக்கோரி பொதுமக்களும், எதிர்க்கட்சிகளும் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக, காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் எம்.பிக்கள் இரண்டு நாள் போராட்டத்திற்கு பிறகு பாதிக்கப்படட பெண்ணின் குடும்பத்தை நேரில் சந்துத்து ஆறுதல் அளித்து உரிய நடவடிக்கை பெற்றுத்தருவதாக வாக்குறுதி அளித்தனர்.

இந்நிலையில், எதிர்கட்சிகளின் கோரிக்கையைத் தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்கும்படி அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பரிந்துரை செய்தார். இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டுப்பட்டு கைது செய்யப்பட்ட தாகூர் சமூககத்தை சேர்ந்த 4 இளைஞர்களையும் விடுக்ககோரி பா.ஜ.க தலைவர், வலதுசாரி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு முன்பு ஹத்ராஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தாகூர் சமூதாய இளைஞர்களுக்கு ஆதரவாக வலதுசாரி குழுக்களான பஜ்ரங் தளம், ஆர்.எஸ்.எஸ் மற்றும் கர்ணி சேனா மற்றும் உள்ளூர் பா.ஜ.க தலைவரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்பம் உட்பட நூற்றுக்கணக்கான மக்கள் பா.ஜ.க தலைவரும் முன்னாள் ஹத்ராஸ் எம்.எல்.ஏ-மான ராஜ்வீர் சிங் பெஹல்வானின் வீட்டில் நேற்று கூடி, தவறுதலாக நால்வரும் கைதாகியுள்ளதாகவும், சிறப்பு விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

அதன்படி, இன்று மதியம் பெண்ணின் வீட்டின் முன்பு திரண்ட பா.ஜ.க ஆதரவாளர்கள், தாகூர் சமூகத்தினர் மற்றும் வலதுசாரி அமைப்புகள் கைதானவர்களை விடுவிக்க கோரி முழக்கங்களை எழுப்பினர்கள்.

பாதிக்கப்பட்ட பெண் வீட்டின் முன்பு, 300 பேருக்கும் மேற்பட்டவர்கள் கூடும்வரை, அம்மாவட்ட காவல்துறை என்ன செய்தது? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றன. மேலும், அந்த பெண்ணின் குடும்பத்திற்கு பாதுகாப்பு அளித்து போராட்டத்தின் மூலம் வன்முறையை தூண்ட நினைக்கு பா.ஜ.க தலைவர் ராஜ்வீர் சிங் மற்றும் ஆதரவாளர்களை கைது செய்யவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Also Read: ஹாத்ரஸ் சம்பவத்தை எதிர்த்து நாளை தி.மு.க மகளிரணி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!