India

“அரசு தாக்கல் செய்த அறிக்கை போலி?” - உச்சநீதிமன்றத்தில் வாதம் நிறைவு : 8 வழிச்சாலை தீர்ப்பு ஒத்திவைப்பு!

சேலம் - சென்னை இடையேயான 8 வழிச்சாலை திட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்கக் கோரி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. கடந்த இரண்டு நாட்களாக இறுதி விசாரணை நடைபெற்றது.

நேற்று மத்திய அரசு தரப்பில் வாதிட்ட சோலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, 8 வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த சுற்றுச்சூழல் துறையின் முன் அனுமதியைப் பெறத்தேவை இல்லை. திட்டத்தை செயல்படுத்தும்போது மட்டும் அனுமதி பெற்றால் போதும். அதனை சென்னை உயர்நீதிமன்றம் சரியாகக் கருத்தில் கொள்ளாமல் திட்டத்துக்கு தடை விதித்துள்ளது. எனவே சென்னை உயர்நீதிமன்றத்தின் தடை உத்தரவை ரத்துசெய்து திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

விவசாயிகள் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர்கள், இந்த திட்டமானது பெருமளவு விவசாய நிலங்களை சேதப்படுத்தும் திட்டம். இதனால், விவசாயிகள் பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களை இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த திட்டத்தால் சுற்றுச்சூழல் பெருமளவுக்குப் பாதிக்கும் என்று வாதிட்டனர்.

மேலும், சேலம் - சென்னை இடையே ஏற்கனவே இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளும் ஒரு மாநில நெடுஞ்சாலையும் இருக்கும் சூழ்நிலையில் நான்காவதாக ஒரு நெடுஞ்சாலை தேவையற்றது. சுற்றுச்சூழல் துறையானது இதுவரை அனுமதி வழங்காத இந்த திட்டத்திற்கு நிலங்களை கையகப்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கக் கூடாது.

இந்த திட்டத்துக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆய்வு அறிக்கையும் போலியானது. எனவே, விவசாயிகளின் நலனைப் பாதிக்கும் இந்த திட்டத்துக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று வாதிட்டனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ஒருவாரத்தில் மனுதார்கள் எழுத்துமூலமான கூடுதல் வாதங்களை தாக்கல் செய்ய அனுமதி வழங்கினர். பின்னர் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

Also Read: போதிய நிதி இருக்கும் போது கோவில்களிடம் இருந்து உபரிநிதி கேட்பது ஏன்? - அறநிலைய துறைக்கு ஐகோர்ட் கேள்வி