India

“புனித பூமியான ‘இந்தியா’ பாலியல் வன்கொடுமைக்கான நிலமாக மாறியுள்ளது” - சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் வேதனை!

கொரோனா ஊரடங்கின்போது, மஹாராஷ்டிராவில் உள்ள தமிழர்களை மீட்க கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலன் தொடர்பான விவகாரங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என மத்திய மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய கடந்த முறை உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டதை அடுத்து வழக்கை அடுத்த வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அப்போது, மனுதாரர் சூரியபிரகாசம் ஆஜராகி திருப்பூர் மாவட்டத்தில் அசாம் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் 4 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக இன்றைய செய்தி தாள்களில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டினார்.

Also Read: ஒவ்வொரு மணி நேரமும் 4 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை: குற்ற ஆவணக் காப்பகத்தின் அதிர்ச்சித் தகவல்!

அதற்கு நீதிபதிகள், தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உரிய நேரக்கட்டுப்பாடும் இல்லை, உரிய ஊதியமும் வழங்கப்படுவதில்லை என்றும் குற்றம்சாட்டினர்.

மேலும், புனித பூமி என கருதப்படும் இந்திய நாட்டில், 15 நிமிடத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை நடப்பதால், பாலியல் வன்கொடுமைக்கான நிலமாக மாறியுள்ளதாக வேதனை தெரிவித்தனர்.

இது துரதிஷ்டவசமானது என்றும், குறிப்பாக இந்தியாவில் புலம்பெயர்ந்த பெண் தொழிலார்களுக்கு பாதுகாப்பில்லை என்றும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். பின்னர் திருப்பூர் சம்பவம் குறித்து மேற்கு மண்டல ஐ ஜி விசாரணையை விரைவுபடுத்தி குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

Also Read: இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 87 பாலியல் வன்கொடுமை: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 7% அதிகரிப்பு- NCRB தகவல்!