India
“சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது; நீதி வழங்கவில்லை" - கே.எஸ்.அழகிரி விமர்சனம்!
அயோத்தி பாபர் மசூதி 1992ஆம் ஆண்டில் இடிக்கப்பட்ட வழக்கில் பா.ஜ.க தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட 32 பேர் விடுதலை செய்யப்படுவதாக சி.பி.ஐ நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பரவலான விமர்சனங்களைச் சந்தித்துள்ளது.
இந்தத் தீர்ப்பு தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில், “அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு 28 ஆண்டுகள் கழித்து லக்னோ சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அனைத்து குற்றவாளிகளையும் விடுதலை செய்து தீர்ப்பு அளித்திருக்கிறது. போதிய ஆதாரங்களோ, சதித் திட்டத்திற்கான தடயங்களோ இல்லாததால் அனைவரையும் விடுதலை செய்வதாக நீதிபதி கூறியிருக்கிறார். இந்த தீர்ப்பு சட்டத்தின் ஆட்சி மீது நம்பிக்கை வைத்திருக்கிற அனைவருக்கும் மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது.
பா.ஜ.க. உள்ளிட்ட சங் பரிவாரங்கள் கரசேவை செய்வதாக அறிவித்து, ஆயிரக்கணக்கானவர்களை திரட்டி, 464 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாபர் மசூதியை 1992 இல் பலவந்தமாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. கரசேவகர்களை தூண்டும் வகையில் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, உத்தரபிரதேச அன்றைய முதல்வர் கல்யாண் சிங் உள்ளிட்டோர் செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
ஆனால், இந்த குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரங்களை மத்திய புலனாய்வுத்துறை திரட்டவில்லை. சதித் திட்டத்திற்கான சாட்சியங்களையும் சேகரிக்கவில்லை. இந்த வழக்கை நிரூபித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதில் மத்திய புலனாய்வுத்துறை முற்றிலும் தோல்வியடைந்திருக்கிறது. இதன்மூலம் மத்திய புலனாய்வுத்துறை மத்திய பா.ஜ.க. அரசின் கைப்பாவையாக செயல்பட்டதோ என்கிற பலத்த சந்தேகம் எழுகிறது. இதன் காரணமாகவே பாபர் மசூதி இடிப்பில் சம்பந்தப்பட்ட பா.ஜ.க.வினர் அனைவரும் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
கடந்த ஏப்ரல் 2017 இல் பாபர் மசூதி இடிப்பு குறித்து உச்சநீதிமன்றம் குறிப்பிட்ட போது, 'இது ஒரு கிரிமினல் நடவடிக்கை. இது அதிர்ச்சி தரத்தக்க வகையில் அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதச்சார்பற்ற கொள்கைக்கு கேடு விளைவிக்கிற செயல். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருப்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். இந்த கூற்றுக்கு நேர்மாறாக லக்னோ சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிகளை விடுவித்திருக்கிறது.
சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஆனால், நீதி வழங்கவில்லை. எனவே, இந்த தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!