India

“மாநிலஅரசின் அதிகாரம் மூலம் விவசாயிகளுக்கு இழைத்த துரோகங்களுக்கு பிராயச்சித்தம் தேடுங்கள்”: கே.எஸ்.அழகிரி

வேளாண் சட்டங்களிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்க ராஜஸ்தானைப் போல், மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்ட நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “பா.ஜ.க அரசு கொண்டு வந்த விவசாயிகள் விரோத மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கொடுத்துள்ளார். காங்கிரஸ் நேரடியாகச் சென்று குடியரசுத் தலைவரிடம் முறையிட்டு, இந்தச் சட்டத்துக்கு ஒப்புதல் தர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டது. எனினும், இதற்கான ஒப்புதலைக் குடியரசுத் தலைவர் வழங்கியுள்ளார்.

விவசாயச் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் வெடித்துள்ளது. கர்நாடக மாநிலத்திலும் விவசாயிகள் தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்துப் போராடி வருகின்றனர். தமிழகத்தில் 70 மாவட்டங்களில் 3,500 இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மூன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பாக பங்கேற்று மாபெரும் போராட்டத்தை நடத்தி முடித்திருக்கிறார்கள்.

விவசாயச் சட்டங்களை வரலாற்றுச் சிறப்புமிக்க சீர்திருத்தம் என்று பா.ஜ.க கூறுகிறது. அதேசமயம், 3 விவசாயச் சட்டங்களைப் பல மாநிலங்கள் எதிர்த்து வருகின்றன. விவசாயிகளுக்கு எதிரான இந்தச் சட்டங்களை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகப்போவதாக, பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.

இத்தகைய சட்டங்கள் கூட்டாட்சியின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. விவசாயம் என்பது அரசமைப்புச் சட்டத்தில் மாநிலப் பட்டியலுக்குள் வரும்போது, மாநில அரசுகளைக் கலக்காமல் மத்திய பா.ஜ.க அரசு மூன்று சட்டங்களைக் கொண்டு வருவதன் உள்நோக்கம் எல்லோருக்கும் எளிதாகப் புரியும். இந்தச் சட்டங்களால் கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே பலனடைவர். விவசாயிகளுக்கு எந்தப் பலனும் இல்லை என்பதை விவசாயத்துறை வல்லுநர்கள் ஆதாரத்துடன் எடுத்துரைத்துள்ளனர்.

அரசியல் கட்சிகள் சொல்வதையோ, வல்லுநர்கள் சொல்வதையோ கேட்காமல், விடாப்பிடியாக 3 சட்டங்களையும் மாநிலங்களவையில் குரல் ஓட்டு மூலம் மோடி அரசு நிறைவேற்றியிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், விவசாயிகளின் நலனைக் காக்க ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு முதல் அடியை எடுத்து வைத்துள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தில் ஒன்றியத்தின் பட்டியல், மாநிலப் பட்டியல், பொதுப் பட்டியல் என அதிகாரங்கள் தெளிவாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும், சில உறுப்புகளின் அடிப்படையில் மத்திய அரசு தனது எச்ச அதிகாரத்தை தன்னிச்சையாகப் பயன்படுத்துகிறது. இதன் மூலம் மாநில அதிகாரத்திற்குட்பட்ட விவசாயம் உள்ளிட்ட சிலவற்றின் மீது மத்திய அரசு சட்டம் இயற்றியிருக்கிறது. இது கூட்டாட்சித் தத்துவத்தைக் குழிதோண்டிப் புதைக்கிற செயலாகும்.

மத்திய அரசின் சட்ட வரம்புக்குள் தலையிடாமல், மாநில வரம்புக்குட்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ளது. அவசரச் சட்டங்களாகவே இருக்கும் மத்திய சட்டப் பிரிவுகள் சிலவற்றை ரத்து செய்தும் ராஜஸ்தான் மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன்படி, சட்டம் அல்லது துணைச் சட்டம் மூலம் விவசாயிகளுக்குப் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

உதாரணத்துக்கு, மாநில அரசுகளின் வரம்பு மற்றும் கட்டணத்துக்குட்படாமல் மத்திய சட்டம் உருவாக்கும் புதிய சந்தைகளை, இதன் மூலம் ராஜஸ்தான் அரசு தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும். மத்திய சட்டத்தில் மாற்றம் செய்யாத வகையில் மாநில அரசின் சட்டம் அமையும். மத்திய சட்டத்துக்குப் பதில் அளிக்கும் வகையிலும் மாநில அரசின் சட்டத்தின் கீழ், நிர்வாக உத்தரவு பயன்படுத்தப்படும்.

ராஜஸ்தான் மாநில அரசு நிறைவேற்றிய சட்டத்தின் 6-வது பிரிவின்படி, சந்தைக் கட்டணத்தையோ அல்லது வரியையோ மாநில அரசுகளின் கீழ் உள்ள விவசாய உற்பத்தி மற்றும் சந்தைக் குழுக்கள் சட்டத்தின் கீழ் வசூலிக்க முடியாது. பண்ணை வாயில்கள், கிடங்குகள் மற்றும் குளிர்சேமிப்புக் கிடங்குகள் மத்திய அரசின் கீழ் வரும்.

எனினும், சந்தை விவசாயம் மற்றும் துணை விவசாயம் ஆகியவை மாநில விவசாய உற்பத்தி சந்தைச் சட்டத்தின் கீழ் ராஜஸ்தானில் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, தனியார் சந்தைகளும் துணை சந்தைகளும் மாநில சட்டங்களின் கீழ் தானாக வந்துவிடும்.

இந்த நிர்வாக அதிகாரத்தைத்தான் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநில அரசு பயன்படுத்தியுள்ளது. இதன் மூலம் இந்திய உணவுக்கழகம், மத்திய சேமிப்புக் கிடங்கு கழகம் மற்றும் ராஜஸ்தான் சேமிப்புக் கிடங்கு கழகம் ஆகியவை குறைந்தபட்ச ஆதரவு விலையின் அடிப்படையிலேயே கொள்முதல் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

1961 ஆம் ஆண்டு ராஜஸ்தான் விவசாய உற்பத்தி சந்தைச் சட்டத்தின் 6-வது பிரிவின் கீழ், தமக்குள்ள அதிகாரத்தை ராஜஸ்தான் அரசு பயன்படுத்தியுள்ளது. இதன் மூலம், மத்திய அரசின் சேமிப்புக் கிடங்குகள் மாநில அரசுக்குச் சந்தைக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். இத்தகைய ஆக்கபூர்வ நடவடிக்கையின் மூலம் விவசாயிகளின் வயிற்றில் பாலை வார்த்துள்ள ராஜஸ்தான் மாநில அரசைப் பாராட்டுகின்றேன்.

'இதுபோன்ற சட்டத்தைக் காங்கிரஸ் ஆளும் இதர மாநில அரசுகள் பயன்படுத்தினால், மத்திய அரசின் பாதகமான சட்டங்களிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்க முடியும்' எனக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த ஆலோசனையைத் தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க அரசும் ஏற்று, ராஜஸ்தானைப் போல், மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதன்மூலம், விவசாயச் சட்டங்களைக் கண்மூடித்தனமாக ஆதரித்து தமிழக விவசாயிகளுக்குத் துரோகம் இழைத்ததற்கு, பிராயச்சித்தம் தேடியதாகவும் இருக்கும் என்பதை முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: வேளாண் சட்டங்களை நிராகரிக்க காங். ஆளும் மாநிலங்களில் சட்டமியற்றுவது குறித்து ஆலோசியுங்கள்: சோனியா காந்தி