India

“பா.ஜ.க அரசின் சட்டங்கள் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு வலையை அகற்றிடும் ” - காங்கிரஸ் கடும் எதிர்ப்பு!

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் 3 தொழிலாளர் மசோதாக்களை பா.ஜ.க அரசு கடந்த சனிக்கிழமையன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.

தொழில் பாதுகாப்பு - சுகாதாரம் - பணி நிபந்தனைகள் 2020, தொழில்துறை சார் உறவுகள் 2020, சமூக பாதுகாப்பு 2020 ஆகிய இந்த மசோதாக்கள் தொழிலாளர்களுக்கு எதிரானவை என எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி வருகின்றன.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவரும் முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான மல்லிகார்ஜுன் கார்கே பேசுகையில், “தொழிற்சங்கங்களை பலவீனமாக்கிவிட்டனர், தொழிலாளர்கள் பாதுகாப்பு வலையை அறுத்து எறிந்துவிட்டனர்.

இந்தச் சட்டங்கள் மூலம் மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு அபகரித்துக் கொள்கிறது. தொழிலாளர் விரோத சட்டங்களுக்கு எதிராகப் போராட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

மோடி அரசு கார்ப்பரேட்டுகள் கூறுவதைத்தான் கேட்கும், இந்தச் சட்டங்களுக்குப் பிறகு தொழிலாளர் சங்கத்தின் குரல்களுக்கு அரசு செவிசாய்க்காது” எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா கூறுகையில், “ஒவ்வொரு நலிந்த பிரிவினர் மீதும் குறிவைத்து அவர்களுக்கு எதிரான சட்டங்களை வகுத்துவருகிறது மோடி அரசு.

விவசாயிகளுக்கு துரோகம் இழைத்த கையோடு தொழிலாளர்கள் வாழ்விலும் கையை வைத்துள்ளது. இந்தச் சட்டங்களால் தொழிலாளர்களுக்கு எந்த ஒரு பாதுகாப்பும் கிடையாது.

கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இந்தச் சட்டங்களில் எதுவுமில்லை. பா.ஜ.க அரசின் மரபணுவிலேயே ஜனநாயகத்தைத் தூக்கி எறிந்துவிட்டு மக்கள் மீது தங்கள் அதிகாரத்தைத் திணிக்கும் போக்கு இருக்கிறது” எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.

Also Read: "நாளைய தலைமுறை இழித்துப் பேசுமாறு செயல்படாமல், இனியேனும் நடவடிக்கை எடுங்கள்” - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!