File image
India

“மாநில அரசுகளின் அதிகாரங்களை தட்டிப்பறிக்கும் மசோதாக்கள்” - மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன் பேச்சு!

மாநில அரசுகளின் அதிகாரங்களை தட்டிப்பறிக்கும் வகையில் தான் பா.ஜ.க அரசின் மசோதாக்கள் அமைந்திருப்பதாக தி.மு.க எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் குற்றம்சாட்டினார்.

இன்று மக்களவையில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் பேசுகையில், “கொரோனா தன் கொடூர முகத்தைக் காட்டியபோது, மக்களைக் காப்பாற்றி பாதுகாப்போடு பராமரிக்க பொன்னான வாய்ப்பு அப்போது கிடைத்தது. ஆனால் அதனைப் புறக்கணித்து விட்ட பிரதமர், தனது கவனத்தை எல்லாம் ட்ரம்ப்பை மகிழ்வித்து உபசரிப்பதில்தான் செலுத்தி வந்தார்.

பெரும் துயரம் வந்த பின் தீர்க்க முயல்வதை விட, வருவதற்கு முன்னதாகவே தடுப்பதே சிறந்தது. இதைத்தான் திருவள்ளுவர் தனது குறளின் மூலம் தெரிவித்திருக்கிறார். ஆனால் பா.ஜ.க அரசோ உரிய முன்னேற்பாடுகளைச் செய்யாத காரணத்தால் நமது நாடு பல்லாயிரக்கணக்கான உயிர்களை கொரோனாவுக்கு பலி கொடுக்க வேண்டியதாகிவிட்டது.

ஏப்ரல் மாதத்தில் மட்டும் கோடிக்கணக்கானவர்கள் வேலை இழப்புக்கு உள்ளாயினர். நாடு மிகப்பெரும் பொருளாதார நசிவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

தொற்றுக் காலத்தில் உலக நாடுகளின் ஆட்சியாளர்கள் மக்களோடு மக்களாக இருந்து அவர்களின் துயர் துடைத்தனர். ஆனால் இந்த அரசோ அடக்குமுறைச் சட்டங்களின் மூலமாக மக்களைத் திண்டாட வைத்துவிட்டது.

கொரோனா எனும் நச்சுத் தொற்றால் மக்கள் அபாயகரமான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எனவேதான் மாணவர்கள் தேர்வுக்கு சென்றால் அவர்களின் உயிருக்கே உத்தரவாதம் இல்லை என்ற சூழலில் நீட் தேர்வை நிறுத்தி வையுங்கள் என்று மாணவர்கள் கூக்குரலிட்டனர்.

ஆனால் அந்தக் குரல்களை மத்திய அரசு கேட்காமலேயே போய்விட்டது. அதனால் தான் தமிழகம் பல மாணவ,மாணவியரின் மரணங்களைச் சந்திக்க வேண்டிய துயரம் ஏற்பட்டது.

இந்தியாவில் உள்ள ஒரு மருத்துவர் 40 ஐரோப்பிய மருத்துவர்களுக்கு சமமாகக் கருதப்படுகிறார். இத்தகைய ஆற்றலை குலைக்கும் வகையில் நீட் தேர்வை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது.

எனவேதான் எங்கள் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடர்ந்து நீட் தேர்வை நிறுத்த வலியுறுத்தி வருகிறார். கலைஞரின் ஆட்சிக் காலத்தில் பள்ளிப் படிப்பில் பெற்ற மதிப்பெண்களை வைத்து உயர் வகுப்புகளில் இடம் வழங்குவது என்ற வாய்ப்பை ஏற்படுத்தினார். அமெரிக்காவில் கூட இத்தகைய கல்வி அணுகுமுறைகளை ஆய்வு செய்யும் அளவுக்கு கலைஞருடைய திட்டங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டுவந்தன.

காலனியாதிக்கக் காலத்தின் சட்டங்கள் போன்று கொண்டுவரப்படும் சட்டங்களால் மக்கள் மிகக்கொடுமையான காலகட்டத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். மாநில அரசுகளின் அதிகாரங்களை தட்டிப்பறித்து கொள்கின்ற வகையில் தான் இத்தகைய மசோதாக்கள் அமைந்திருக்கின்றன.” என உரையாற்றினார்.

Also Read: இதுதான் மோடியின் தமிழ்ப்பற்றா? : குஜராத் தமிழ்ப் பள்ளியை மூட பா.ஜ.க அரசு முடிவு - பெற்றோர்கள் போராட்டம்!