India

“விவசாயிகளை படுகுழியில் தள்ளும் பா.ஜ.க-அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்” : என்.கே.கே.பெரியசாமி

மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாக்கள் விவசாயிகளை கார்ப்பரேட் முதலாளிகளிடம் அடிமைகளாக ஆக்கும் சட்டங்களே என தி.மு.க. விவசாய அணித் தலைவரும், முன்னாள் அமைச்சருமான என்.கே.கே.பெரியசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிரான மூன்று மசோதாக்களை எதிர்கட்சிகளின் மிகப்பெரிய எதிர்ப்புகளையும் மீறி அவசர அவசரமாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றி குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்புவது விவசாயிகளை படுகுழியில் தள்ளுவதாகும். இதற்கு தமிழகத்தில் ஆளும் எடப்பாடி பழனிச்சாமி அரசும் துணைபோவது மிக வன்மையாகக் கண்டிக்க வேண்டியதாகும்.

மத்திய அரசும், மாநில அரசும் முதற்கட்டமாக விவசாயிகளுக்கு நியாயமாக செய்யவேண்டியவை நிறைய உள்ளன. விவசாயிகளின் அனைத்து விளைபொருட்களுக்கும் மோடி அரசு கடந்த இரண்டு தேர்தலுக்குமுன் அறிவித்தது போல உற்பத்திச் செலவை கணக்கிட்டு அதற்கு மேல் ஒன்னரை (1½) மடங்கு அதிகம் கூட்டி குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்து இருக்கவேண்டும். அதைப் புறக்கணித்துவிட்டு பெரும் முதலாளிகளுக்கு துணை போய் உள்ளதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது.

குறைந்தபட்ச ஆதாரவிலையை நிர்ணயப்பதோடு அதற்கு குறைவாக வெளிச் சந்தையில் விளைபொருள் விற்றால் மாநில அரசே உடனடியாக MSP விலையில் கொள்முதல் செய்து விலையை கட்டுப்படுத்த வேண்டும். குறிப்பாக விவசாயிகளுக்கு நெல், கரும்பு ஆகியவற்றுக்கு மத்திய, மாநில அரசுகள் அறிவித்த விலையைத் தவிர மற்ற விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையுள்ளதா? இல்லையா? என்பதே விவசாயிகளுக்குத் தெரியாது. இதுதான் இன்றைய விவசாயிகளின் நிலை.

தமிழகத்தில் அதிக அளவில் விளையும் நெல், கரும்பு, வாழை, தேங்காய், பருத்தி, மக்காச்சோளம், நிலக்கடலை, மரவள்ளிக் கிழங்கு, உருளைக் கிழங்கு, வெங்காயம், பருப்பு வகைகள், காய்கறி வகைகள் ஆகியவற்றிக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அறிவிக்காமல் விட்டுவிட்டு குறைவாக உற்பத்தியாகும் கோக்கோ, கோழிப்பண்னைக்கு ஒப்பந்த முறையில் கொள்முதல் செய்யப்படுகிறது என்பதை உதாரணமாக காட்டுவதை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகளுக்கு தெளிவாக விளக்கவேண்டும்.

தமிழகத்தில் அதிகளவில் விளையும் பொருளான நெல்லுக்கு மத்திய- மாநில அரசுகள் குறைந்தபட்ச ஆதார விலையாக (கிலோவுக்கு ரூ.18.65) குவிண்டால் ரூபாய் 1,865/- நிர்ணயித்து உள்ளது. ஆனால் தனியார் குவிண்டால் ரூ.1200/-க்கு வாங்குவது எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியாதா? அதுபோல மக்கா சோளத்திற்கு அரசின் குறைந்தபட்ச ஆதார விலை (MSP) குவிண்டாலுக்கு ரூபாய் 1,850/- ஆனால் தனியார்கள் ரூபாய் 1450/-க்கு கொள்முதல் செய்கிறார்கள். இவைகளை முதலில் அரசு கட்டுப்படுத்தி முக்கிய உணவுப் பொருளான நெல்லுக்கான விலையை சரிசெய்யாவிட்டால் மத்திய அரசின் மசோதாக்கள் விவசாயிகளுக்கு நியாயமாக எந்தவிதத்திலும் பலனளிக்காது.

முன்பு விவசாயிகளிடம் நாட்டுச் சர்க்கரையை வீடுவீடாகச் சென்று கொள்முதல் செய்து வியாபாரம் செய்து வந்த தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் விவசாயப் பொருட்களை எங்குவேண்டுமானாலும் கொண்டு சென்று விற்கலாம் எனக் கூறுவது வேடிக்கையாக உள்ளது. சிறு குறு விவசாயிகள் தங்களின் ஒருஏக்கர் - இரண்டுஏக்கர் நிலத்தில் விளையும் விளைபொருட்களை நேரடியாக எப்படி பெரிய வியாபாரிகளுக்கு விற்கமுடியும்.

குஜராத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு பெப்சி என்ற கார்ப்பரேட் முதலாளிகளின் கம்பெனி ஆயிரக்கணக்கான விவசாயிகளிடம் ஒப்பந்த அடிப்படையில் சிப்ஸ்க்காக உருளைக்கிழங்கு சாகுபடி செய்து அதில் தரமான பெரிய கிழங்குகளை மட்டும் கொள்முதல் செய்து விட்டு சிறிய கிழங்குகளை மீண்டும் விவசாயிகளின் தலையில் கட்டிவிட்டது வேறு வழியில்லாமல் விவசாயிகள் அந்த கிழங்குகளை வெளிச்சந்தையில் விதைக்கு விற்ற பின் பெப்ஸி கார்ப்பரேட் கம்பெனி அந்த விவசாயிகளின் மீது வழக்குத் தொடுத்து கோடிக்கணக்கில் நஷ்டஈடு கேட்டது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியாதா?

பிரதமர் மோடி தான் ஆட்சிக்கு வந்ததும் ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை என்றும் பொதுமக்கள் ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் பதினைந்து இலட்சம் பணம் போடப்படும் என்றும் கறுப்புப் பணம் ஒழிக்கப்படும் எனக் கூறி கேலிக்கூத்தாக பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்து மக்களை ஏமாற்றிக் கூறிவந்தது போல தற்போது இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகளின் வயிற்றில் அடிப்பது என்ன நியாயம். கார்ப்பரேட் கம்பெனி முதலாளிகளுக்கு ஆதரவாக சட்டம் இயற்றும் மோடி அரசு முதலில் விவசாயிகளுக்கு அவர்கள் விளைவிக்கும் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அறிவிக்க வேண்டும். அது இல்லாமல் விவசாயிகளை தற்கொலைக்கு ஆளாக்கும் இந்த சட்டத்தை ஆதரித்ததன் விளைவாக ஆளும் அ.தி.மு.க. அரசு விவசாயிகளுக்கு மாபெரும் துரோகம் செய்துவிட்டது.

மோடி அரசின் மத்திய வேளாண் அமைச்சர் விவசாயிகளின் நிலம் பாதுகாக்கப்படும் என்று கூறும்போதே விவசாயிகள் முதலாளித்துவ நிறுவனங்களான கார்ப்பரேட் கம்பெனிகள் நிலங்களை பறித்துக்கொள்ளாது என கூறுவது போல உள்ளது. மேலும் அவர் விவசாயிகளின் விளைபொருள்களுக்கு மூன்று நாளில் பணம் தரப்படும் எனக் கூறுவது வேடிக்கையாக உள்ளது.

உதாரணமாக கரும்பு கட்டுப்பாடு சட்டத்தின் கீழ் சர்க்கரை ஆலை முதலாளிகளிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டு பல ஆண்டுகளாக விவசாயிகளுக்கு இந்திய அளவில் வழங்கப்பட வேண்டிய ரூபாய் 74 ஆயிரம் கோடி நிலுவைத் தொகையை மத்திய -மாநில அரசுகள் தீர்த்து வைத்துவிட்டு மோடி அரசுக்கு வக்காலத்து வாங்குவதைச் செய்யலாம். தமிழக கரும்பு விவசாயிகளுக்கும் கம்பெனிகளுக்கும் அரசுக்கும் முன்னிலையில் நடைபெறும் விலை நிர்ணயக் கூட்டமான முத்தரப்புக் கூட்டம் கடந்த நான்கு ஆண்டுகளாக கூட்டப்படவே இல்லை. இது தமிழக முதலமைச்சருக்கு தெரியுமா? கரும்பு விவசாயிகளுக்கு ஒப்பந்தப்படி 15 நாளில் தரவேண்டிய பல்லாயிரம் கோடி ரூபாய் பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும்போது மத்திய வேளாண்துறை அமைச்சர் விளைபொருள்களுக்கு 3 நாளில் பணம் தரப்படும் என்று கூறுவதை முதலமைச்சர் ஏற்றுக்கொள்வாரா?

தமிழகத்திலுள்ள சர்க்கரை ஆலைகள் 2013 முதல் 2017 வரை நான்காண்டு பருவங்களுக்கும் சேர்த்து மத்திய அரசின் SMP-க்கும், மாநில அரசின் SAP-க்கும் விலை வித்தியாச நிலுவைத் தொகை ரூபாய் 1400 கோடி வழங்க வேண்டி இருந்தது. SIFA எனும் விவசாய அமைப்பைத் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி ஆலை முதலாளிகள் நான்கு பருவங்களுக்கும் சேர்த்து டன் ஒன்றுக்கு ரூபாய் 160/- போதும் என்று முறைகேடான ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார்கள். அதில் ஒரு சில ஆலைகள் குறைவான தொகை கொடுத்தும் விவசாயிகளிடம் முழுவதும் பெற்றுக் கொண்டதாக கையெழுத்து வாங்கிக் கொண்டனர். பெரும்பாலான ஆலைகள் முற்றிலும் தராமல் ஒப்பந்தத்தை கேலிக் கூத்தாக்கியதை அரசு மறுக்க முடியுமா? ரூபாய் 1400/- கோடிக்கு பதிலாக சட்டத்திற்குப் புறம்பான ஒப்பந்ததின் மூலம் விவசாயிகளுக்கு ரூபாய் 100/- கோடிக்கும் குறைவாக வழங்கியதற்கு அரசு நடவடிக்கை எடுக்காததற்கு என்ன காரணம் என்று தெரிவிக்க முடியுமா? தொடர்ச்சியாக முத்தரப்பு கூட்டத்தை தவிர்ப்பது எதனால் என தெரிவிக்க முடியுமா?

கடந்த நான்கு வருடங்களாக கரும்பு ஆலை அதிபர்கள் விவசாயிகளிடம் கரும்பு பதிவு செய்வதைக் குறைத்து பதிவு செய்யாத கரும்பை அதிகப்படுத்தி அதிகளவில் வெளிமார்கெட்டில் குறைந்த விலையில் கொள்முதல் செய்வது அரசுக்குத் தெரியுமா? இதன்மூலம் பதிவு செய்யாத கரும்பை விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு வாங்குவதும் ஆலை அதிபர்கள் விவசாயிகளையும் அரசையும் ஏமாற்றி வருவதை அரசு எப்படி ஏற்றுக் கொண்டுள்ளது. இது எல்லா தனியார் ஆலைகளும் தமிழ்நாடு மட்டும் அல்லாமல் அண்டை மாநிலங்களிலிருந்தும் விவசாயிகளுக்கு உரிய விலை கொடுக்காமல் ஏமாற்றி கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடித்து வருவது அரசுக்கு தெரியுமா? நம்முடைய சிறு குறு விவசாயிகள் எல்லாம் நம்மஊர் முதலாளிகளுடன் செய்து கொள்ளும் இந்த ஒப்பந்தமே இந்த லட்சணத்தில் இருக்கும்போதே விவசாய மசோதா 2020ன்படி அதானி, அம்பானி போன்ற பெருமுதலாளிகளுடன் செய்து கொள்ளும் ஒப்பந்தம் எவ்வாறு முடியும் என்பதை யோசிக்க வேண்டாமா?

பி.எஸ்.என்.எல், ஏர்டெல், வோடஃபோன், ஏர்செல் போன்ற செல்போன் நிறுவனங்களை கபலீகரம் செய்த ரிலையன்ஸ் கம்பெனி முதலாளி அம்பானியிடமும் அதுவல்லாமல் பத்துக்கு மேற்பட்ட விமான நிலையங்களையும் இந்தியாவின் பல துறைமுகங்களையும் தன்வசப்படுத்தியுள்ள அதானியிடமும் அத்துடன் வெளிநாட்டின் முதலாளிகளிடமும் 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள 80 சதவீத விவசாயிகளை அடமானம் வைத்து அடிமையாக்கும் முயற்சிக்கு துணைபோவது விவசாயியான முதலமைச்சருக்கு நியாயந்தானா?

இந்த சட்டங்களால் மாநில அரசின் உரிமைகள் பறிபோவதை நாங்கள் எந்தக் காலத்திலும் ஏற்றுக் கொள்ளமாட்டோம்; குக்கிராமத்தில் உள்ள அடித்தட்டு விவசாயிகள் மோசமான நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பதை தானும் ஒரு விவசாயி எனக் கூறிக்கொள்ளும் முதலமைச்சர் உணர்ந்துள்ளாரா என்பதை தெரிவிக்க வேண்டும். மத்திய அரசு கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசு மாபெரும் துரோகம் செய்து விவசாயிகளை படுகுழியில் தள்ளப்போவது நிச்சயம். தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ள தமிழக மக்களின் வாழ்வாதாரங்களை தொடர்ந்து மோசமான நிலைக்கு தள்ளுவதைப் போல நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளை கொடுமைபடுத்துவதை தட்டிக் கேட்காமல் மத்திய அரசு செய்யும் தவறான செயல்களுக்கு கண்ணை முடிக்கொண்டு ஆதரிக்கும் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் அளிப்பார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “பா.ஜ.க அரசின் வேளாண் மசோதாக்கள் விவசாயிகளை ஒழித்துக்கட்டும் முயற்சி” - மு.க.ஸ்டாலின் மடல்!