India
“தென்னிந்தியர்கள், மைனாரிட்டிகள், பட்டியலினத்தவர் இணைந்த கலாச்சார குழுவை அமைத்திடுங்கள்” : மு.க.ஸ்டாலின்
"இந்தியக் கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு அமைத்துள்ள 16 உறுப்பினர்கள் கொண்ட குழுவில், “தமிழறிஞர்கள் - தென்னிந்தியர்கள் - வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் - மைனாரிட்டிகள் - பட்டியலினத்தவர் இடம்பெற பிரதமர் நரேந்திர மோடி வகை செய்ய வேண்டும்" என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “இந்தியக் கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு அமைத்துள்ள 16 உறுப்பினர்கள் கொண்ட குழுவில், “தமிழறிஞர்கள் - தென்னிந்தியர்கள் - வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் - மைனாரிட்டிகள்- பட்டியலினத்தவர் இடம்பெற வேண்டும்” என்று, திராவிட முன்னேற்றக் கழக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கூறிய ஆலோசனையைக் கேட்ட பிறகு, “திருச்சி சிவா நல்ல ஆலோசனை வழங்கியிருக்கிறார்; இதைக் குறித்துக் கொண்டு- அந்த ஆலோசனையைப் பரிசீலிக்க வேண்டும்” என்று சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சருக்கு மாநிலங்களவைத் தலைவர் மாண்புமிகு வெங்கய்யா நாயுடு உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
தமிழர்களின் கலாச்சாரம் - ஏன், திராவிடர்களின் கலாச்சாரம், மிகத் தொன்மை வாய்ந்தது. இந்தியாவின் மிகவும் மூத்த மொழியாகத் தமிழ் செம்மொழி இருக்கிறது. ஆனால் 12 ஆயிரம் ஆண்டு இந்தியக் கலாச்சாரத்தை ஆய்வு செய்யப் போகிறோம் என்று ஒரு குழுவை அமைத்துள்ள மத்திய பா.ஜ.க. அரசு, – அதில் ஒரு தமிழறிஞரைக் கூட இடம்பெறச் செய்யவில்லை. நாட்டின் பன்முக அடையாளத்தையும் - பண்டையத் தமிழ் - திராவிட நாகரிகத்தையும் அவமதிக்கும் எண்ணத்துடன் – தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ள அந்தக் குழுவில் உள்ள 16 உறுப்பினர்களில், 6 பேர் சமஸ்கிருத மொழியில் புலமைத்துவம் பெற்றவர்கள் என்பது, “தமிழ்மொழி” மீது மத்திய அரசுக்கு இருக்கும் ஆழமான வெறுப்பைக் காட்டுகிறது.
திராவிட நாகரிகத்தைப் பின்னுக்குத்தள்ளி - சரஸ்வதி ஆறு நாகரீகத்தைப் புகுத்தி - இந்தியக் கலாச்சார வரலாற்றை மாற்றி எழுதி விட மத்திய பா.ஜ.க. அரசு துடிக்கிறது! அதனால்தான் மக்களவையில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சு.வெங்கடேசன் “இந்தக் கமிட்டி “பன்முகத்தன்மையை இழந்துவிட்டது” என்று குறிப்பிட்டதோடு நின்று விடாமல், “விந்திய மலைக்குக் கீழே ஒரு இந்தியா இல்லையா” என்றும் மத்திய பா.ஜ.க. அரசைப் பார்த்து ஆவேசமாகக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
கொரோனாவால் மக்கள் கொத்துக் கொத்தாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் - இந்தியப் பொருளாதாரம் இதுவரை எந்தக் காலக்கட்டத்திலும் இல்லாத அளவிற்கு, -23.9 சதவீதத்திற்கு மேல் வீழ்ச்சியடைந்து விட்ட நிலையில் - வேலை இல்லாத் திண்டாட்டம் எங்கும் தாண்டவமாடி, பல கோடிக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலம் இருட்டில் தள்ளப்பட்டுள்ள நேரத்தில் கூட – சரஸ்வதி ஆறு - வேத கால நாகரிகத்தை எப்படியாவது, தனது பெரும்பான்மையைக் கொண்டு, திணிக்க மத்திய பா.ஜ.க. அரசு தனது முழு நேரத்தையும் செலவிடுவது மிகுந்த வேதனையளிக்கிறது.
மதத் துவேஷங்களை விதைக்கும் கலாச்சாரப் பிரச்சாரத்தின் மூலம், இந்தியாவின் பன்முகத் தன்மையோடும் - உலக நாடுகள் மதிக்கும் இந்தியாவின் பன்மொழிக் கலாச்சாரத்தோடும், ஆட்சிக்கு வந்ததிலிருந்து விபரீத விளையாட்டை நடத்தி வரும் மத்திய பா.ஜ.க. அரசு - இந்தப் பெருமைக்குரிய மண்ணின் அரசியல் சட்டத்திற்கே மிகப்பெரிய சவாலாக - அச்சுறுத்தலாக இருப்பது கவலையளிக்கிறது.
இதுபோன்ற சூழலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எடுத்து வைக்கப்பட்ட ஆலோசனையை, “நல்ல ஆலோசனை” என்று பாராட்டி - அதை மத்திய அரசுக்கும் சுட்டிக்காட்டியுள்ள மாநிலங்களவைத் தலைவரின் அறிவுரையை, அவரும் தென்னகத்தவர்தானே என அலட்சியப்படுத்தி விடாமல் பின்பற்றி, செயல்படுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தற்போது அமைக்கப்பட்டுள்ள கலாச்சார ஆய்வுக் குழுவை உடனடியாக மாற்றி அமைத்து – “தமிழ்நாடு, தென்னிந்தியா, வடகிழக்கு மாநிலங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் மற்றும் பட்டியலின, சிறுபான்மை சமூகப் பிரதிநிதிகள்” பங்கேற்கும் வகையில், புதிய குழுவினை நேர்மையான முறையில் நடுநிலையோடு, உடனடியாக நியமித்திட, மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சருக்குப் பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?