India
மதுரை எய்ம்ஸ் எப்போது அமையும்? - கட்டுமான பணி இழுத்தடிப்பு: கனிமொழி MP கேள்விக்கு மோடி அரசு அலட்சிய பதில்
மத்திய அரசின் 2015ம் ஆண்டு பட்ஜெட்டில் தமிழகத்தில் “எய்ம்ஸ் மருத்துவமனை” அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி 1,264 கோடி மதிப்பீட்டில், கடந்த 2019, ஜனவரி மாதம் பிரதமர் மோடி மதுரையை அடுத்த தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.
அடிக்கல் நாட்டி 1 வருடத்திற்கு மேல் ஆகியும் கட்டுமான பணிகள் இதுவரை தொடங்கவில்லை. குறிப்பாக, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் ஆரம்பம் முதல் பெரும் பிரச்னையே நிகழ்ந்து வருகிறது.
அண்மையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒதுக்கப்பட்ட 224.42 ஏக்கர் நிலம் தமிழக அரசால் மத்திய சுகாதாரத்துறை வசம் ஒப்படைக்கப்படவில்லை என்ற தகவல் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வெளிவந்தது. இதையடுத்தே, மாவட்ட நிர்வாகம், நிலம் அளவீடு செய்து 224.42 ஏக்கர் நிலத்தை மத்திய சுகாதாரத்துறைக்கு ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.
முன்னதாக பிரதமர் மோடி மதுரைக்கு வந்து எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டியது தென் மாவட்ட மக்கள் மத்தியில் இந்த முறை நிச்சயம் மதுரையில் ‘எய்ம்ஸ்’ வந்துவிடும் என எண்ணவைத்தது. ஆனால் மாநில அரசு இதற்கு போதிய ஆர்வம் காட்டவில்லை என குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது.
இந்நிலையில், மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பாக அறிவிப்பு வெளியாகி இதுவரை 2 ஆண்டுகள் ஆன நிலையில், சாலை மற்றும் சுற்றுச்சுவர் பணிகள் துவங்கப்பட்டு அதுவும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதனிடையே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப்பணிகள் எப்போது துவங்கும் என தென்காசியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு டிசம்பரில் தொடங்கும் என கூறப்பட்டது.
இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது கட்டி முடிக்கப்படும் என மக்களவையில் நேற்று முன்தினம் திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதில் அளித்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை இணைஅமைச்சர் அஷ்வின் குமார், “மதுரையின் எய்ம்ஸ்மருத்துவமனைக்காக ஜப்பான் சர்வதேச வங்கியிடம் (ஜப்பான்இண்டர்நேஷனல் கோஆப்ரேஷன் ஏஜென்ஸி-ஜேஐசிஏ) கடன் கேட்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதல் கிடைக்க வேண்டும்.
இது தொடர்பான ஒப்பந்தத்தில் ஜப்பான் குறிப்பிடும் காலக்கட்டத்தை பொறுத்தே மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது நிறைவடையும் என்பதைக் கூற முடியும்” என கூறியுள்ளது. மதுரையில் எம்ய்ஸ் மருத்துவமனை அமைப்பத்தில், மத்திய அரசு முறையான திட்டமிடலும் ஆர்வமும் இல்லாமல் செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!