India
ஆப்செண்ட் ஆன அன்புமணி; ஆதரித்து பேசிய ஓ.பி.ஆர் : வேளாண் மசோதாவை நிறைவேற்றிய மோடி அரசு !
மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு கடந்த ஆட்சியின்போது நிறைவேற்ற முடியாமல் போன திட்டங்கள் அனைத்தையும் தனக்கிருக்கும் பெரும்பான்மை பலத்தினால் இந்த ஆட்சியில் படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. பா.ஜ.க அரசு கொண்டு வரும் திட்டங்கள் யாவும் கார்ப்பரேட் நலன் சார்ந்ததாகவும் ஆர்.எஸ்.எஸ்ஸின் இந்துத்வா சித்தாந்தங்களின் அடிப்படையிலும் இருந்து வருகிறது.
அதன்படி, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதும், குடியுரிமை சட்டம் மூலம் மக்களை பிளவுபடுத்தும் வேலைகளையும் செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது மாணவர்களின் நலனை பாதிக்கும் வகையில், வர்ணாசிரம கொள்கையின்படி புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்துள்ளது.
அந்த புதிய கல்விக் கொள்கையில் ஏழை மாணவர்களின் கல்வி கனவினைத் தகர்க்கும் வகையிலும் தமிழகம் போன்ற மாநிலங்களில் மும்மொழிக் கொள்கையைப் பாடத்திட்டத்தின் வழியாகக் கொண்டு வந்து இந்தி, சமஸ்கிருத மொழிகளை திணிக்கப் பார்க்கிறது.
கொரோனா பேரிடரைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் உலக நாடுகளின் அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. ஆனாலும் பெருந்தொற்றை சமாளிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்தச் சூழலிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டாத பா.ஜ.க அரசு, ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி சில அவசர சட்டங்களையும், திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறது.
அந்தவகையில் ஊரடங்கு காலத்தில் புதிய கல்விக் கொள்கைக்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை 2020 இல் சட்டத் திருத்தம் மேற்கொள்ள வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
மேலும், தேசியக் கடல் மீன்வள ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை வரைவு மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களை மோடி அரசு தாக்கல் செய்துள்ளது.
விவசாய உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தகம் மசோதா 2020, விவசாயிகள் விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களை பெரும்பான்மையை பயன்படுத்தி நாடாளுமன்றத்தின் இரு அவகைகளும் மத்திய மோடி அரசு நிறைவேற்றியது.
இதற்கு எதிர்க்கட்சிகளிடையே கடுமையான எதிர்ப்புகள் நிலவி வந்தன. மாநிலங்களவையில் உள்ள தி.மு.க. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் இந்த மசோதாக்கள் மூலம் சந்தைக்குச் செல்லும் விவசாய விளை பொருள்களின் விலையை நிர்ணயம் செய்யும் அதிகாரம் பெரு வணிகர்களிடமும், கார்பரேட் நிறுவனங்களிடமும் சென்றுவிடும் என குற்றஞ்சாட்டினர்.
விவசாயிகளுக்கு எதிரான மசோதாக்களை தேர்வுக்குழுவின் ஆய்வுக்கு விட வேண்டும் என தி.மு.க. எம்.பி திருச்சி சிவா திருத்த தீர்மானத்தையும் தாக்கல் செய்திருந்தார். ஆயினும், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குற்றச்சாட்டுகள், எதிர்ப்புகளை கருத்திலேயே கொள்ளாமல், மத்திய பாஜக அரசு மாநிலங்களவையிலும் சர்ச்சைக்குரிய வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாடே எதிர்க்கும் வேளாண் மசோதாக்களை தமிழகத்தில் ஆட்சி செய்யும் அ.தி.மு.க அரசு ஆதரித்து வாக்களித்ததுள்ளது. நாடாளுமன்றத்தின் மக்களவையில் அ.தி.மு.க எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத் ஆதரித்து பேசினார்.
அதேப்போல் வழக்கமாக நாடாளுமன்றத்திற்கே செல்லாமல் பா.ம.கவின் எம்.பி அன்புமணி ராமதாஸ் இருந்துள்ளது. தமிழக மக்களுக்கு இதுபோல துரோகங்களை அ.தி.மு.க., பா.ம.க தொடர்சியாக செய்வதாக பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
மேலும், மத்திய மோடி அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாவுக்கு அ.தி.மு.க ஆதரவு அளித்துள்ளது தன்னையும், தனது அமைச்சர்களையும் பாதுகாத்துக் கொள்ளவே இப்பாதகத்தைச் செய்தேன் என முதலமைச்சர் பழனிசாமி, “ஒப்புதல் வாக்குமூலம்” அளித்து - விவசாயப் பெருமக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்” என திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!