India

ஏ.டி.எம்-களில் 10,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தால் OTP கட்டாயம் : SBI வங்கி அறிவிப்பு!

போலி ஏ.டி.எம் கார்டுகள் மூலம் ஏ.டி.எம். மையங்களில் இருந்து பணம் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அவ்வப்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

இந்த மோசடி வேலைகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதால் வாடிக்கையாளர்கள் மிகுந்த அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர். இது போன்ற மோசடிகள் தொடர்பாக வங்கிகளுக்கும் ஏராளமான புகார்கள் வந்துக் கொண்டிருப்பதால் புதிய நடைமுறை ஒன்றை செயல்படுத்தவுள்ளது பாரத ஸ்டேட் வங்கி.

அதன்படி, நாள் ஒன்றுக்கு பணம் எடுக்கும் அதிகபட்ச வரம்பை 40 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரமாக குறைத்ததோடு மட்டுமல்லாமல், 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஏ.டி.எமில் இருந்து பணம் எடுத்தால் ரகசிய எண்ணை (OTP) பயன்படுத்தும் முறையை அறிமுகப்படுத்தவுள்ளது.

ரூ.10,000க்கு மேல் பணம் எடுக்கும் போது வாடிக்கையாளரின் மொபைல் எண்ணுக்கு வரும் ரகசிய எண்ணை ஏ.டி.எம் இயந்திரத்தில் பதிவிட்ட பிறகே பணம் எடுக்க முடியும் என்றும் எஸ்.பி.ஐ. தெரிவித்துள்ளது.

மேலும், இந்த முறை எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்-ஐ பயன்படுத்தும் அதன் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பயன்படுத்திக்கொள்ள முடியும் என்றும், மற்ற வங்கி வாடிக்கையாளர்கள் பழைய முறையிலேயே பணம் எடுத்துக்கொள்ளலாம் என்றும் இந்த ஓடிபி முறை நாட்டின் அனைத்து எஸ்.பி.ஐ ஏ.டி.எம் மையங்களிலும் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

எனவே, எஸ்.பி.ஐ வங்கி வாடிக்கையாளர்ளகள் இனி ஏ.டி.எம்-களுக்கு பணம் எடுக்க செல்லும் போது, தங்களது செல்போனையும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

Also Read: சுற்றுச்சூழலை அடுத்து விவசாயத்தை பலி கொடுக்கும் பண்ணை சேவை மசோதா : மோடி அரசின் அடுத்த நாசகாரத்திட்டம்!