India

“மாநிலங்களுக்கு உதவாமல் வேறு எதற்குத்தான் PM Cares நிதி இருக்கிறது?” - சஞ்சய் ராவத் எம்.பி கேள்வி!

மாநில அரசுகளுக்கு வழங்காதபோது வேறு எந்த பயன்பாட்டிற்காக pm cares நிதி செலவிடப்படுகிறது என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மகாராஷ்டிர அரசை விமர்சித்திருந்த பா.ஜ.க எம்பி வினய் சகஸ்ரபுத்தேவுக்கும் சஞ்சய் ராவத் பதிலடி கொடுத்திருந்தார். அதில், தாராவி போன்ற மக்கள் அடர்த்தி அதிகம் உள்ள பகுதிகளில் மாநில அரசு கொரோனா பரவலை வெகுவாகக் கட்டுப்படுத்தியிருக்கிறது.

உலக சுகாதார அமைப்பு மற்றும் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கையை மகாராஷ்டிர அரசு கையாண்டு வருகிறது. ஆனால், மத்திய அரசோ, பாதுகாப்பு உபகரணங்கள், மாஸ்க், சானிடைசர் போன்றுவற்றுக்கான நிதியை கொடுப்பதை கடந்த செப்டம்பர் 1ம் தேதியில் இருந்து நிறுத்தியிருக்கிறது.

இதனால், மகாராஷ்டிர அரசுக்கு நாளொன்றுக்கு 50 கோடி ரூபாய் செலவு ஏற்படுகிறது. ஆகவே கொரோனா தடுப்பு பணிக்காக மாநில அரசுகளுக்கு கொடுக்காமல் இருக்கும் பி.எம்.கேர்ஸ் நிதியை வேறு எதற்காக மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது என சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏற்கெனவே பி.எம்.கேர்ஸ் நிதி குறித்து கேள்வி எழுப்ப எவருக்கும் அதிகாரம் இல்லையென ஆர்.டி.ஐ. மூலம் கேட்கப்பட்ட விவரத்திற்கு பிரதமர் அலுவலகம் பதிலளித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read: “கொரோனா நோயுடனான போரில் அதிக மருத்துவர்களை இழந்த இந்தியா” : இன்னுயிர் நீத்தவர்களை கண்டுகொள்ளாத மோடி அரசு!