India
கொரோனா அறிகுறி இருப்பவர்கள் தேர்வு எழுதலாமா? - மத்திய அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் சொல்வது என்ன?
நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு வருகிற 13-ந்தேதி நடைபெற இருக்கிறது. கொரோனா தொற்று உச்சத்தில் இருக்கும் சூழலில் தேர்வை நடத்தினால் அது மாணவர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் எனக் கூறி இந்த தேர்வை தள்ளி வைக்கவேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது.
ஆனால் தேர்வை தள்ளி வைக்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் அறிவித்தது. இதனால் திட்டமிட்டபடி செப்டம்பர் 13-ந் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது.
கொரோனா அறிகுறி இருந்தாலும் அவர்களை தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்கலாம் என முன்னர் மத்திய சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் கல்லூரி, பல்கலைக்கழகத் தேர்வுகளை நடத்த, திருத்தப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது :
* கொரோனா அறிகுறி கொண்ட மாணவர்களைத் தனிமைப்படுத்தித் தேர்வெழுத வழங்கும் அனுமதி ரத்து செய்யப்படுகிறது. மாறாக, அறிகுறி உடைய மாணவர்கள் அருகில் உள்ள சிகிச்சை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். மாணவர் எப்போது உடல் ரீதியாகத் தகுதிபெற்றவராக அறிவிக்கப்படுகிறாரோ அப்போது தேர்வை எழுதக் கல்வி நிறுவனம் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
* எனினும் அத்தகைய மாணவர்களைத் தேர்வெழுத அனுமதிக்கலாமா வேண்டாமா என்பதை ஏற்கெனவே வரையறுக்கப்பட்டுள்ள திட்டப்படி, தேர்வுகளை நடத்தும் அதிகாரிகள் முடிவு செய்யலாம்.
* கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வசிக்கும் ஆசிரியர்களுக்கும் தேர்வர்களுக்கும் தேர்வறைக்குள் நுழைய அனுமதியில்லை. அவர்களுக்குப் பின்னர் ஒரு தேதியில், தேர்வை எழுதக் கல்வி நிறுவனம் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
* முகக்கவசம், சானிடைசர்கள், சோப், சோடியம் ஹைப்போக்ளோரைட் கரைசல் ஆகியவற்றைக் கல்வி நிறுவனங்கள் தயாராக வைத்திருக்க வேண்டும்.
* ஆசிரியர்களும் தேர்வர்களும் தங்களுடைய உடல்நிலை குறித்து சுய அறிவிப்புப் படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். தவறினால் தேர்வு மையங்களுக்குள் நுழைய அவர்களுக்கு அனுமதியில்லை.
* தொற்று அறிகுறி இல்லாத ஆசிரியர்கள், மாணவர்களுக்கு மட்டுமே தேர்வறைக்குள் நுழைய அனுமதி அளிக்கப்படுகிறது. அவர்களும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டியது அவசியம்.
* தேர்வறைக்குள் முகக்கவசத்தைக் கழற்றாமல் அனைத்து நேரங்களிலும் அணிந்திருக்க வேண்டும்.
* தேர்வு மையங்களுக்குள் கூட்டம் ஏற்படுவதை அலுவலர்கள் தவிர்க்க வேண்டும்.
* பேனா- தாள் சார்ந்த தேர்வுகளுக்கு, கேள்வித்தாள்களையும் விடைத்தாள்களையும் கொடுப்பதற்கு முன்னால், கண்காணிப்பாளர் தன் கைகளை சுத்தப்படுத்த வேண்டும். அதேபோல அவற்றை வாங்கும் முன் மாணவர்களும் தங்கள் கைகளைத் தூய்மைப்படுத்த வேண்டும்.
* வினா, விடைத்தாள்களை விநியோகிக்கும் முன்னரும் எண்ணிப் பார்க்கும்போதும் எச்சில் தொட்டுப் பணியைச் செய்வது கூடாது.
* விடைத்தாள் சேகரிப்பு, பேக்கிங் என ஒவ்வொரு கட்டத்திலும் கைகள் சுத்தப்படுத்தப்பட வேண்டும். குறைந்தபட்சமாக 72 மணி நேரங்களுக்குப் பிறகே விடைத்தாள்களைப் பிரிக்க வேண்டும்.
* தேர்வின்போது தேர்வர்களுக்கோ, ஆசிரியருக்கோ கொரோனா அறிகுறி கண்டுபிடிக்கப்பட்டால், அவரைத் தனிமைப்படுத்துவதற்கெனத் தனியாக ஓர் அறை அருகிலேயே இருப்பது அவசியம்.
இவ்வாறு வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!