India

கொரோனா டெஸ்ட் எடுத்தால் உணவு இலவசம் : பஞ்சாப் முதல்வரின் நூதன தடுப்பு நடவடிக்கை!

உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 42 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்புகளை கொண்டு இந்தியா இரண்டாவது இடத்தில் வகிக்கிறது.

நாளொன்றுக்கு சராசரியாக 90 ஆயிரம் பேர் புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்படுகிறது. இப்படி இருக்கையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் நாடு முழுவதும் மேலும் கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்தும் வகையில் பல்வேறு புதிய வழிமுறைகளை வெளியிட்டிருந்தது.

இருப்பினும், கொரோனாவை விட அதனால் தனிமைப்படுத்தப்பட்டு உணவில்லாமல் தவிக்கும் நிலை ஏற்படுமோ என்ற பயத்தின் காரணமாகவே பலர் தாமாக முன்வந்து கொரோனா சோதனை எடுத்துக்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர்.

இந்நிலையில் பஞ்சாப் மாநில அரசு புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா பரிசோதனை செய்துக் கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், தாமாக முன்வந்து சோதனை மேற்கொண்டால் அவர்களுக்கான உணவுகளை அரசே வழங்கும் என முதலமைச்சர் கேப்டன் அம்ரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

ஏனெனில், இதன் மூலம் ஏழை மக்களுக்கு தக்க சமயத்தில் உணவு கிட்டுவதோடு, கொரோனா பரவலையும் தடுக்க வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வைரஸ் பரவல் அதிகமாக இருக்கும் பாட்டியாலா மாவட்டத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதனையடுத்து பிற மாவட்டங்களிலும் செயல்படுத்த அதிகாரிகளுக்கு முதலமைச்சர் கேப்டன் அம்ரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, பஞ்சாப்பில் 61 ஆயிரத்து 527 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. அதில் 1808 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது..