India

“பயன்படுத்தப்படாத சீசன் டிக்கெட்டுகளை செல்லும் என ரயில்வே அறிவிக்க வேண்டும்” : கோவை எம்.பி வலியுறுத்தல்!

ரயில் சேவை இல்லாததால் ஏற்கனவே சீசன் டிக்கெட் பெற்று பயன்படுத்தாதவர்களின் சீசன் டிக்கெட்டுகள் செல்லும் என அறிவித்து கால நீட்டிப்பு செய்து, பயணிகளின் சுமையை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தெற்கு ரயில்வே துறைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், “நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்கள் தங்களின் அன்றாட பயணத்திற்காக குறைந்த கட்டணத்தில் சீசன் டிக்கெட்டுகளை பெற்று பயன்படுத்தி வருகின்றனர். தொலைதூர இடங்களிலிருந்தும், புறநகர் மின்சார ரயில்கள் உட்பட தங்களது பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக இவர்கள் ரயில் சீசன் டிக்கெட்டுகளை முழுமையாக பணம் செலுத்தி வாங்கியுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா தொற்று அச்சத்தின் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடந்த ஐந்து மாதங்களாக தமிழகத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ரயில் சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்கள் இன்றுவரை அதனை பயன்படுத்த முடியாதநிலை உள்ளது. தற்போது தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் நலனுக்காக ரயில் சேவையை இயக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் சில நிபந்தனைகளை தளர்த்தியுள்ளன. ஏற்கனவே, கொரோனா நெருக்கடியால் பலர் வேலை இழந்துள்ளனர்.

ஐந்து மாதங்களுக்கும் மேலாக எந்த வருவாயும் இல்லாமல் இந்த ஏழை மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக அதிக நிதி நெருக்கடியில் உள்ளனர். எனவே, இந்த ரயில் பயணிகள் ஏற்கனவே வாங்கிய ரயில் சீசன் டிக்கெட்டுகளுக்கு பயன்படுத்தப்படாத கால அளவிற்கு செல்லுபடியை நீட்டிக்க வேண்டும். இது ஏழை மக்களுக்கு ஓரளவு நிதி நிவாரணம் அளிக்கும்.

முன்னதாக, தமிழக அரசு பேருந்து சீசன் டிக்கெட்டுகளின் செல்லுபடியாகும் காலத்தை நீட்டித்துள்ளது. எனவே, தெற்கு ரயில்வேயும் பயணிகளின் தற்போதைய நெருக்கடியை உணர்ந்து கூடுதல் தொகை இல்லாமல் பயன்படுத்தப்படாத காலத்தின் அளவிற்கு செல்லுபடியை நீட்டிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: “PM CARES நிதியை இப்போதாவது செலவு செய்யுங்கள்” : பிரதமர் மோடிக்கு சீத்தாரம் யெச்சூரி வலியுறுத்தல்!