India

“PM CARES நிதியை இப்போதாவது செலவு செய்யுங்கள்” : பிரதமர் மோடிக்கு சீத்தாரம் யெச்சூரி வலியுறுத்தல்!

கொரோனா நிவாரண நிதியைப் பெறுவதற்காக PM Cares எனும் நிதி திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி. இந்த நிதிக் கணக்கில் செலுத்தப்படும் தொகை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் அந்தத் தொகை முழுவதும் முறையாக செலவு செய்யப்பட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகளின் சார்பில் முன்வைக்கப்படுகிறது.

இந்நிலையில், கொரானா வைரஸ் தொற்றைக் காரணம் காட்டி, தன் பெயரில் தனியார் அறக்கட்டளை ஒன்றின் மூலம் வசூல் செய்து வைக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான ரூபாயை, இப்போதாவது செலவு செய்திட பிரதமர் மோடி முன்வர வேண்டும் என்று சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ட்விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “கொரோனா வைரஸ் தொற்று பரவுவதில் இந்தியா, பிரேசிலை பின்தள்ளி, முதலிடத்தை நோக்கி வேகமாகச் சென்றுகொண்டிருக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்றைப் பரவாது கட்டுப்படுத்துவதிலும் தன்னுடைய திறமையின்மையை உலகுக்குப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. மக்களை இத்தொற்றிலிருந்து காப்பாற்ற எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காமல், அவர்களாகவே தங்களைக் காப்பாற்றிக் கொள்ளட்டும் என்ற விதத்தில் மிகவும் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டிருக்கிறது.

நாட்டின் பொருளாதாரம் பாழாகிவிட்டது. கோடானுகோடி மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துவிட்டார்கள். பொது முதலீட்டை அதிகப்படுத்துங்கள், நாட்டின் உள்கட்டமைப்புகளைக் கட்டி எழுப்புங்கள். அதன்மூலம் வேலையில்லாதவர்களுக்கு வேலை வழங்குங்கள், பொருளாதாரத்தை மீட்க வழிகாணுங்கள் என்று நாம் கூறிய ஆலோசனைகள் அனைத்தையும் மோடி அரசாங்கம் கண்டுகொள்ளவேயில்லை.

இதனால் நாட்டில் கோடானுகோடி மக்கள் இன்றையதினம் வறுமை, துன்ப துயரங்களுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். கொரோனா வைரஸ் தொற்றைச் சொல்லி தன்னுடைய பெயரில் தனியார் அறக்கட்டளை ஒன்றின் மூலமாக வசூலித்துள்ள பல்லாயிரம் கோடி ரூபாயை, மக்களைக் காப்பாற்றுவதற்காக, விடுவித்திட குறைந்தபட்சம் இப்போதாவது பிரதமர் மோடி முன்வர வேண்டும். மக்களுக்கு ரொக்க மாற்று மற்றும் இலவச உணவு அளித்து, அவர்கள் உயிர்வாழ்வதற்கு வகை செய்திட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: "PM Cares நிதி அதிகாரப்பூர்வமானதல்ல" : மோடி தலைமையில் பல்லாயிரம் கோடி முறைகேடு? - வெடிக்கும் சர்ச்சை!