India
“அதிர்ச்சி கிளப்பும் ஆடியோ : மெகா ஊழல் செய்யத் திட்டமிடும் அ.தி.மு.க அரசு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
"'ஊழலுக்காக' எப்படியெல்லாம் அரசு நிர்வாக நெறிமுறைகளை வளைக்கிறார்கள் - 'முன்தேதியிட்டு தீர்மானங்களை' மிரட்டிப் பெற முயற்சிக்கிறார்கள் என்பதற்கு 'ஜே.ஜே.எம். திட்ட ஊழலில்' ஊரக வளர்ச்சித்துறை அதிகாரியொருவரே அனுப்பியுள்ள 'ஆடியோ எச்சரிக்கை' ஆதாரமாக இருக்கிறது" என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “2374.74 கோடி ரூபாய் மதிப்புள்ள 'ஜல் ஜீவன் மிஷன்' திட்டத்தின்கீழ் தமிழக ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் 'வீட்டுக் குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்கும் திட்டம்' குறித்த மாவட்ட அளவிலான 'பேக்கேஜ் டெண்டரை', முறைகேடுகள் செய்வதற்காகப் பாதுகாத்திட; ஊராட்சி மன்றத் தலைவர்களை அ.தி.மு.க அரசு மிரட்டுவதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த 'ஜே.ஜே.எம்.' திட்டத்தின்கீழ், புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் 497 ஊராட்சிகளில், 148 ஊராட்சிகளுக்கு விடப்பட்ட 'பேக்கேஜ் டெண்டரை' எதிர்த்தும், ஊராட்சி மன்றங்களுக்கே நிதியையும், ஜே.ஜே.எம். பணிகளையும் நேரடியாக ஒதுக்கிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஊராட்சி மன்றத் தலைவர்களின் சங்கங்கள் சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
அந்த வழக்கு விசாரணைக்காக, “ஜே.ஜே.எம். குடிநீர்த் திட்டம் குறித்த கிராமச் செயல்திட்டம் மற்றும் தீர்மானங்களை ஊராட்சி மன்றத் தலைவர்களிடம் உடனடியாக முன்தேதியிட்டுப் பெற வேண்டும்” என்று மிரட்டல் விடுத்து, மாவட்டத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு எல்லாம் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரியொருவரே அனுப்பியுள்ள 'ஆடியோ எச்சரிக்கை' அதிர்ச்சியளிக்கிறது.
அந்த 'ஆடியோ உத்தரவில்' முன்தேதி எப்படிப் பெறப்பட வேண்டும் என்பதை விளக்கியுள்ள அதிகாரி, “புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்திட்டத்திற்கு பேக்கேஜ் டெண்டர் விட்ட தேதிகளுக்கு (29.6.2020 மற்றும் 10.7.2020) முன்பான ஒரு தேதியில் அந்தத் தீர்மானங்களிலும், கிராம செயல் திட்டங்களிலும் கையெழுத்துப் பெற வேண்டும்” என்றும்; “அது 10.7.2020-ஆம் தேதியாக இருக்கலாம்” என்றும் தனது 'ஆடியோ உத்தரவில்' அந்த ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி எச்சரிக்கிறார் என்றால், ஜே.ஜே.எம். ஊழல்களிலும், முறைகேடுகளிலும் அதிகாரிகள் தங்களை எந்த அளவிற்கு 'அக்கறையுடன்' ஈடுபடுத்திக் கொண்டு - உள்ளாட்சித்துறை அமைச்சரின் ஊழலில் 'கூட்டணி' அமைத்துச் செயல்படுகிறார்கள் என்பது, 'கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை' என்பது போல் இந்த 'ஆடியோ எச்சரிக்கை' அமைந்துள்ளது.
“நாங்கள் கிராம செயல்திட்டமும், தீர்மானங்களும் ஊராட்சி மன்றங்களிடம் வாங்கிய பிறகுதான் டெண்டர் விட்டுள்ளோம் என்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து விட்டோம். ஆகவே டெண்டர் விடப்பட்ட தேதிகளுக்கு முன் ஒரு தேதியில் தீர்மானத்தையும், ஜல் ஜீவன் மிஷன் குடிநீர்த் திட்டம் குறித்த கிராம செயல்திட்டத்தையும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் கையெழுத்திட வேண்டும்” என்று, 'பி.டி.ஓ'-க்களுக்கு உத்தரவிட்டிருப்பது, உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கிலேயே அ.தி.மு.க. அரசு எப்படி நடந்து கொள்கிறது என்பதற்கு ஆதாரமாக இருக்கிறது.
இத்திட்டத்தைச் செயல்படுத்தும் ஊராட்சித்துறை அதிகாரிகள் - சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் - ஊரக வளர்ச்சித்துறை அரசு செயலாளர் - உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, முதலமைச்சர் பழனிசாமி ஆகியோர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றங்களை எப்படி அவமதிக்கிறார்கள் - 'ஜே.ஜே.எம். திட்ட ஊழலில்' தங்களின் பதவிக்குரிய கடமை - கண்ணியம் எல்லாவற்றையும் மறந்து விட்டு 'ஊழலுக்காக' எப்படியெல்லாம் அரசு நிர்வாக நெறிமுறைகளை வளைக்கிறார்கள் - 'முன்தேதியிட்டுத் தீர்மானங்களை' மிரட்டிப் பெற முயற்சிக்கிறார்கள் என்பதற்கு இந்த 'ஆடியோ எச்சரிக்கை' ஆதாரமாக இருக்கிறது.
ஆகவே இப்போதும் கூட காலம் கழிந்து விடவில்லை. ஜே.ஜே.எம். குடிநீர்த் திட்டப் பணிகளுக்கான நிதிகளை நேரடியாக உள்ளாட்சி மன்றங்களுக்கே அளித்து - மாவட்ட அளவில் விடப்பட்டுள்ள 'பேக்கேஜ் டெண்டர்' முறையை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமியைக் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படி 'முன்தேதியிட்டு தீர்மானங்களை' ஊராட்சி மன்றங்களிடம் பெற்று ஒரு மெகா ஊழல் செய்யத் திட்டமிடுவது, இந்தியத் தண்டனைச் சட்டத்தின்கீழ் 120-B வேலை; அதாவது 'கிரிமினல் கான்ஸ்பரசி' - குற்றச் சதி என்று எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!