India

நூதனமான முறையில் வாடிக்கையாளர்களிடத்தில் பெட்ரோல் திருடிய பங்குகளுக்கு சீல் : தமிழகத்தில் இது சாத்தியமா ?

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் செயல்பட்டு வரும் பெரும்பாலான பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வாடிக்கையாளர்களுக்கு குறைவான அளவு பெட்ரோல் வரும் படி ஏற்பாடு செய்து விற்பனை செய்வதாக அம்மாநில காவல்துறைக்கு புகார் சென்றுள்ளது.

புகாரை விசாரித்ததில் வாடிக்கையாளர்கள் பெட்ரோல் பிடிக்கும்போது பங்க் உரிமையாளர்கள் குறைவான அளவில் பெட்ரோல் செல்லும் படி நவீன தொழில்நுட்பம் மூலம் மோசடி செய்ததை போலிஸார் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து ஹைதராபாத்தில் இருந்து கிடைத்த தகவலின் படிப்படையில், சித்தூர் எஸ்.பி செந்தில் குமார், அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளை சோதனை செய்ய உத்தரவிட்டார். அவரின் உத்தரவின் பேரில் சித்தூர் டி.எஸ்.பி ஈஸ்வர் ரெட்டி தலைமையிலான போலிஸார் அங்குள்ள பெட்ரோல் பங்குகளில் சோதனை செய்தனர்.

அப்போது, மைக்ரோ சிப் ஒன்றை பெட்ரோல் பிடிக்க பயன்படுத்தப்படும் இயந்திரங்களில் பொருத்தி நவீன தொழில்நுட்பம் மூலம் மோசடி செய்துவந்துள்ளனர். அந்த மைக்ரோ சிப் மூலம், ஒவ்வொரு 1 லிட்டர் பெட்ரோல் அல்லது டீசலுக்கும் இந்த எரிபொருள் நிலையங்கள் 970 மில்லி மட்டுமே வெளி வரும் வகையில் ஏற்பாடுகளை செய்து வாடிக்கையாளர்களை பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது.

முதல் கட்டமாக வாடிக்கையாளர்களை ஏமாற்றிய 3 பெட்ரோல் விற்பனை நிலையங்களை போலிஸார் சீல் வைத்தனர். மேலும் மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக இந்திய தண்டனைச் சட்டம் 420 படி பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி மோசடி மற்றும் முறைகேடுகள் தொடர்பான தகவல்கள் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் உள்ளிட்ட 33 பெட்ரோல் விற்பனை நிலையங்களை போலிஸார் மூடினார்கள். மேலும் இந்த நிலையங்களில் இருந்து 14க்கும் மேற்பட்ட சீப்-க்களை போலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இவைகள் அனைத்து மும்பையில் இருந்து வாங்கி பல்வேறு எரிபொருள் நிலையங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் இதனைப் பயன்படுத்தியதால் ஒரு மாதத்தில் நுகர்வோருக்கு கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என போலிஸ் தரப்பு கூறுகின்றனர்.

இந்த மோசடி முறைகேடுகளுக்கு மூலக்காரணமாக இருந்த நிலைய உரிமையாளர் பாஷா மற்றும் பயன்படுத்திய பாப்ஜி பாபா, மதசுகுரி சங்கர் மற்றும் மல்லேஸ்வர் ராவ் உட்பட 9 உரிமையாளர்களை போலிஸார் கைது செய்துள்ளனர்.

தலைமறைவாகியுள்ள 5 பேரை தேடி வருகின்றனர். சைபராபாத் போலிஸ் கமிஷனர் வி.சி.சஜ்ஜனார் தலைமையில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் இந்த குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக நீடிக்கிறது. தமிழக காவல்துறையும் இதுபோன்ற அதிரடி நடவடிக்கை எடுக்குமா என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Also Read: கருத்துக்காக கொல்லப்பட்ட கெளரி லங்கேஷ் நினைவு தினம் : தமிழகத்திலும் இந்த நிலை வருமுன் தடுக்க முடியுமா?