India

“பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கு ஹேக்” : ஹேக்கர்கள் செய்த ட்வீட்டால் அதிர்ந்துபோன பிரதமர் அலுவலகம்!

உலக அளவில் ஹேக் என்பது இணையசெயல்பாட்டுக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாகவே இருந்துவருகிறது. சமீபத்தில், முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பிரபல தொழிலதிபர்கள் எலான் மஸ்க், பில்கேட்ஸ், வாரன் பபேட், பெஜோஸ், மைக் புளூம்பர்க், அமெரிக்க முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனின் உட்பட பல பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டனர்.

அதில், க்றிப்டோ கரன்ஸி, பிட் காயின் மோசடிப் பதிவுகள் அந்தப் பக்கங்களில் பகிரப்பட்டன. இந்த நிகழ்வு உலகளவில் ட்விட்டர் பயனர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த ஹேக்கிங் எப்படி நடந்தது என எஃப்.பி.ஐ விசாரணை நடத்திவருகிறது.

இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்தது. அதில், பிட்காயின் (Bitcoin) மூலம் COVID-19 நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்குமாறு மோடி கணக்கில் இருந்து தொடர்ச்சியான ட்வீட்கள் அனுப்பப்பட்டன.

பிரதமர் மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கை 25 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் அந்த ட்விட்டர் கணக்கை முடக்கிய ஹேக்கர்கள், "கோவிட் -19 க்காக உருவாக்கப்பட்ட பிரதமர் மோடி நிவாரண நிதிக்கு பிட்காயின் வழியாக நன்கொடை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ட்விட்கள் நீக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக இ-மெயில் வாயிலாக ட்விட்டர் செய்தித்தொடர்பாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இந்த கணக்கை ஜான் விக் (hckindia@tutanota.com) ஹேக் செய்ததாகவும், இருப்பினும் இப்போது இந்த ட்வீட்டுகள் நீக்கப்பட்டன.

அதே நேரத்தில்,மோடியின் தனிப்பட்ட இணையதளத்திற்கான (https://www.narendramodi.in/) ட்விட்டர் கணக்கை முழுவதுமாக மீட்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும், பிரதமர் அலுவலகத்தின் ட்விட்டர் கணக்கிற்கு (PMO India) ஆபத்து இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாங்கள் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். மேலும், அதிகப்படியான ட்விட்டர் அக்கவுண்ட்கள் இதுபோன்று பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பது எங்களுக்குத் தெரியாது என குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவம் நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “ட்விட்டர் கணக்குகளின் விவரங்களை ஹேக்கர்கள் தரவிறக்கியது எதற்காக?” - ட்விட்டர் நிறுவனம் சந்தேகம்!