India

நீட் தேர்வை தள்ளிவைக்கக் கோரி காங்கிரஸ் சார்பில் நாளை போராட்டம் - கே.எஸ்.அழகிரி அறிவிப்பு!

நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களிலுள்ள மத்திய அரசின் அலுவலகங்கள் முன்பாக மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் நாளை (28.08.2020) வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு பொது ஊரடங்குக்கு கட்டுப்பட்டு சமூக இடைவெளியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு :

“உலகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா தொற்று காரணமாக இந்தியாவும் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது. கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 லட்சத்தை எட்டியிருக்கிறது. 59 ஆயிரத்து 449 பேர் இறந்திருக்கிறார்கள். 156 நாட்களாக பொது ஊரடங்கு நீடித்து வருகிறது.

இந்நிலையில், மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வை செப்டம்பர் 13 ஆம் தேதியும், தேசிய அளவில் முதன்மை நிலையில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கான ஜெ.இ.இ. நுழைவுத் தேர்வை செப்டம்பர் 1 முதல் 6 ஆம் தேதி வரை நடத்த , மத்திய பா.ஜ.க. அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த தேர்வில் பங்கேற்க பெரும்பாலான மாணவர்களும், பெற்றோர்களும் தயாராக இல்லை.

இந்தியா முழுவதும் நீட் தேர்வில் 15 லட்சத்து 93 ஆயிரம் மாணவ, மாணவியர் பங்கேற்கவுள்ளனர். தமிழ்நாட்டில் 1 லட்சத்து 17 ஆயிரம் பேர் இத்தேர்வை எழுதவுள்ளனர். இது கடந்தாண்டை விட 13 சதவிகிதம் குறைவாகும். இதற்கு காரணம் நீட் தேர்வுகள் சி.பி.எஸ்.இ., என்.சி.இ.ஆர்.டி., பாடத் திட்டங்களின் அடிப்படையில் நடத்தப்படுவதால் மாநில பாடத் திட்டத்தின் அடிப்படையில் பயிலுகிற தமிழக மாணவர்களால் வெற்றி பெறமுடியாமல் கடுமையான பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

மேலும், கொரோனா தொற்றுக் காலத்தில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவில்லை. நகரங்களில் இருக்கும் மாணவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் கிராமப்புற மாணவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு எழுதுகிறவர்களின் பெரும்பாலானவர்கள் ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள். இவர்கள் நீட் தேர்வு மையங்களுக்கு வருவதற்கு போக்குவரத்து வசதி இல்லை. அனைத்து ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மருத்துவ, பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வில் மொத்தம் 26 லட்சம் மாணவர்கள் பங்கேற்க வேண்டியுள்ளது. இவர்களுடைய பெற்றோர்களும் சேர்ந்து வந்தால் ஏறத்தாழ 50 லட்சம் பேர் தேர்வு மையங்களுக்கு வருகிற சூழ்நிலை ஏற்படும். இதனால் சமூக இடைவெளி பாதிக்கப்பட்டு கொரோனா தொற்று கடுமையாக பரவக் டிய அபாயம் உள்ளது. இதில், மாணவர்களின் உயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு? மத்திய அரசா, மாநில அரசா?

பொது ஊரடங்கு மற்றும் கொரோனா தொற்றினால், கடந்த ஏப்ரல் மாதத்தில் நடத்துவதாக இருந்த நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. அடுத்து ஜூலையில் நடத்துவதாக இருந்ததும் ஒத்தி வைக்கப்பட்டது. அப்போது ஒரு நாளில் கொரோனா பாதிப்பு 22 ஆயிரமாக இருந்தது. அன்று நீட் தேர்வை ஒத்திவைத்த மத்திய அரசு இன்று ஒரு நாளில் கொரோனா பாதிப்பு 76 ஆயிரமாக உச்சக்கட்ட நிலையிருக்கிற போது, ஏன் ஒத்திவைக்க மறுக்கிறது? நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் கொரோனாவின் எண்ணிக்கை 15 லட்சம் கூடியிருக்கிறது.

கொரோனா தொற்றினால் அச்சம், பீதியோடு மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். எந்த நேரத்தில் என்ன நடக்குமோ? என்ற பயத்துடன் வீடுகளில் முடங்கியிருக்கிறார்கள். கொரோனா பாதிப்பு ஒரு பக்கம்; வேலை வாய்ப்பிழந்து, வருமானத்தைப் பறிகொடுத்து வாழ்வாதாரம் கேள்விக்குறியான நிலை மறுபக்கம். இந்நிலையில் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டுமென நாடு முழுவதும் எதிர்ப்புக் குரல் எழுந்திருக்கிறது.

நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் 7 மாநில முதலமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்தில், ''நீட் தேர்வை தள்ளி வைக்க வேண்டும்; உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும்” என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதை பிரதமர் மோடி தலைமையிலான அரசு தீவிர பரிசீலனை செய்ய வேண்டும். இதில் வீண் பிடிவாதம் காட்டக்கூடாது. இது, மாணவர்களின் எதிர்காலத்தைவிட உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சினையாகும்.

எனவே, கொரோனா தொற்று காரணமாக நாட்டில் நிலவுகிற பதற்றமான சூழலின் அடிப்படையில், நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை உடனடியாக தள்ளிவைக்க வேண்டும். இதற்கு மாற்றாக மருத்துவ, பொறியியல் மாணவர்கள் சேர்க்கைக்கு 12 ஆம் வகுப்பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களின் சேர்க்கையை முடிவு செய்ய வேண்டுமென்று மத்திய பா.ஜ.க. அரசை கேட்டுக் கொள்கிறேன்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அறிவுறுத்தலின்படி, நீட் தேர்வுக்கெதிராக தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களிலுள்ள மத்திய அரசின் அலுவலகங்கள் முன்பாக மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் நாளை (28.08.2020) வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு பொது ஊரடங்குக்கு கட்டுப்பட்டு சமூக இடைவெளியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமென்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.”

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Also Read: “மாணவர்கள் மீதான அக்கறை உண்மையானால் தமிழக அரசு உச்சநீதிமன்றம் செல்லவேண்டும்”- மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!