India

“அரசுக்கு மக்களை விட வணிகம் தான் பெரிதா? ரிசர்வ் வங்கியின் பின்னால் ஒளிவது ஏன்?” - உச்சநீதிமன்றம் சாடல்!

கொரோனா ஊரடங்கு காலத்தில் வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கிய மக்கள், கடன் தவணைகளைத் திருப்பிச் செலுத்த 3 மாதங்கள் அவகாசம் அளித்தது ரிசர்வ் வங்கி. பின்னர் மேலும் 3 மாதங்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

ரிசர்வ் வங்கியின் உத்தரவை சரிவரப் பின்பற்றாத பல வங்கிகள், தவணைகளை வசூலித்து வந்ததோடு, தாமதக் கட்டணம், கூடுதல் வட்டி என்று சுமையை ஏற்றி மக்களை இன்னலுக்குள்ளாக்கின.

இந்நிலையில், ரிசர்வ் வங்கி மூன்று மாதங்களுக்கு செலுத்தவேண்டிய தவணைகளுக்கான வட்டியும் வசூலிக்கப்படும் என்று அறிவித்தது. இது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், கடன் தவணை சலுகை காலத்திற்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஆக்ராவை சேர்ந்த கஜேந்திர சர்மா என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கின் விசாரணையின்போது நீதிபதிகள், “நாடே நெருக்கடியான சூழலில் சிக்கித் தவிக்கும்போது மத்திய அரசு வணிக நோக்கில் மட்டுமே கவனம் செலுத்தக்கூடாது.

தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நிவாரணம் வழங்க மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் அவ்வாறு செய்யாமல், ரிசர்வ் வங்கியின் பின்னால் ஒளிந்துகொண்டு தன் கருத்தை தெளிவுபடுத்த மறுக்கிறது மத்திய அரசு.

வட்டியை தள்ளுபடி செய்தால், வங்கிகளும், நிதி நிறுவனங்களும் பாதிக்கப்படும் என மத்திய அரசு கூறுகிறது. ஆனால் இந்த நிலை ஏற்பட, மத்திய அரசு பிறப்பித்த ஊரடங்கு உத்தரவு தானே காரணம்.

அதனால், கடன் தவணை சலுகை காலத்திற்கான வட்டியை தள்ளுபடி செய்வது குறித்தும், தவணை கால வட்டிக்கு வட்டி விதிக்கப்படுமா என்பது பற்றியும் ஒரு வாரத்திற்குள் மத்திய அரசு பதில் தாக்கல் செய்ய வேண்டும்.” என உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 1ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Also Read: இ பாஸ் முறையால் அவதியுறும் மக்கள்: நீடிக்குமா? ரத்தாகுமா? ஆக.,29ல் தமிழக அரசு ஆலோசனை - ஐகோர்ட்டில் தகவல்