India

நீட் தேர்வு எழுதும் வெளிநாடுவாழ் மாணவர்களை வந்தேபாரத் திட்டத்தின் கீழ் அனுமதிக்கவேண்டும் : உச்சநீதிமன்றம்

வெளிநாடுகளிலிருந்து நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களை வந்தே பாரத் திட்டத்தின் கீழ் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளில் வசிக்கும் 4,000 இந்திய மாணவர்களுக்கு நீட் தேர்வு எழுதுவதற்காக அங்கேயே மையங்கள் ஏற்படுத்த வேண்டும் அல்லது நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் எனக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் விசாரணை நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வில் இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் வெளிநாட்டில் இருந்து மாணவர்கள் இங்கு வந்து தேர்வு எழுத அனுமதிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். இல்லையேல் மாணவர்கள் ஒராண்டை இழந்து விடுவார்கள் என்றும் கூறினர்.

மத்திய அரசின் சொலிசிட்டர் ஜுனரல் துஷார் மேத்தா, வெளிநாட்டில் இருந்து வரும் மாணவர்கள் கொரோனா தனிமைப்படுத்தல் நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்கும் பட்சத்தில் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து, வெளிநாட்டில் இருந்து நீட் தேர்வு எழுத மாணவர்களை வந்தே பாரத் திட்டத்தின் கீழ் அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், மாணவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்துவதில் இருந்து விலக்கு பெறுவதற்கு சம்பந்தப்பட்ட மாநிலத்தை நாடலாம் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

Also Read: “மாணவர்களின் உயிரைப் பணயம் வைத்து அவசர முடிவு எடுக்கவேண்டாம்” - மத்திய அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!