India
“ஆர்.எஸ்.எஸ்காரராகவும் இந்தி வெறியராகவும் இருப்பதுதான் மத்திய அரசு பணிக்கான தகுதியா?” - கி.வீரமணி சாடல்!
மத்திய அரசின் முக்கிய பதவிகளுக்கெல்லாம் உள்ள ஒரே தகுதி குஜராத்தியாகவும், ஆர்.எஸ்.எஸ்.காரராகவும், இந்தி வெறியராகவும் இருக்கவேண்டும் என்கின்ற வகையில் பிரதமரின் போக்கு இருப்பது குறித்தும், காவித் தொற்று, கொரோனா தொற்றைவிட ஆபத்தானது- கொடுமையானது என்பதையும் சுட்டிக்காட்டியும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவரது அறிக்கையின் விவரம் வருமாறு:-
“மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில் டெல்லியில் நடைபெற்ற யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்பில், அந்த அமைச்சகத்தின் செயலாளர் வைத்யா ராஜேஷ் கொட்டேச்சா என்பவர் இந்தி மொழியிலே உரையாற்றியுள்ளார். மொத்த பயிற்சி வகுப்பும் இந்தி மொழியில் மட்டுமே நடந்துள்ளது.
‘கண்டதே காட்சி; கொண்டதே கோலம்!’
தமிழ்நாடு உள்பட இந்தி தெரியாத மாநிலங்களின் பிரதிநிதிகளான மருத்துவர்கள் (40 பேர்கள்) இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், ‘இந்தி’ தெரியவில்லை என்றால், வகுப்பிலிருந்து வெளியேறுங்கள் என்று ஆணவமாக பதில் அளித்துள்ள திமிர் வாதத்திற்கு என்ன பின்னணி? என்ற பல தகவல்கள் ஏடுகளில் வெளியாகி வருவது, பலரையும் அதிர்ச்சி கொள்ளச் செய்வதோடு, பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றுவரும் அரசு எப்படி அரசின் முக்கிய நடைமுறைகளையும்கூட புறந்தள்ளி, ‘கண்டதே காட்சி; கொண்டதே கோலம்‘ என்பதுபோல நடைபெற்று வருகிறது என்பது நாட்டோருக்கு நன்கு விளங்கி வருகிறது.
இந்த ஆயுஷ் அமைச்சகச் செயலாளர் என்ற பெரிய பொறுப்பில் இருந்த அய்.ஏ.எஸ். அதிகாரி அகற்றப்பட்டு, வெறும் ஆயுர் வேதத்தையே படித்த மருத்துவரான வைத்யா ராஜேஷ் கொட்டேச்சா நியமிக்கப்பட்டதே ஒரு விசித்திரமான ஆர்.எஸ்.எஸ். திணிப்பு ஆகும்.
பகிரங்கமாக தனது காவி அடையாளத்தைக் காட்டியுள்ளார்!
‘நான் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளனாக இருப்பதில் தவறில்லை’ என்று கூறி, பகிரங்கமாக தனது காவி அடையாளத்தைப் பெருமைபடக் காட்டியுள்ளார்! குஜராத்தைச் சேர்ந்தவரான வைத்யா ராஜேஷ் கொட்டேச்சா, அம்மாநில முதலமைச்சராக நரேந்திர மோடி இருந்தபோது, குஜராத் ஆயுர்வேதப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டவர் - ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஓர் உறுப்பு அமைப்பான ‘விஞ்ஞான பாரதி’ என்ற அமைப்பின் ஆலோசகராகவும், அதன் முன்னெடுப்பான உலக ஆயுர்வேத அறக்கட்டளை என்பதன் அறங்காவலராகவும் இருந்தவர். மோடி அரசு பதவியேற்றவுடன் 2015 ஆம் ஆண்டு இவருக்கு ‘பத்மஸ்ரீ’ விருது அளிக்கப்பட்டது.
இதுபோல மத்திய அரசின் பல்துறைகளிலும் குஜராத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களே எங்கெங்கும் பரவலாக ‘‘நடப்பட்டுள்ளனர்.’’
துணைவேந்தர்களாக வருவதற்குரிய முதல் தகுதியே ஆர்.எஸ்.எஸ். அடையாள அட்டைதானா?
இந்தியத் தேர்தல் ஆணையராக இருந்தாலும் அல்லது பல முக்கியமான பதவிகளானாலும், நாட்டின் மத்தியப் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களானாலும் இப்படி முக்கிய பதவிகளுக்கு வருவதற்குரிய முதல் தகுதியே ஆர்.எஸ்.எஸ். கார்டு பெற்றவரா, அடையாளம் உள்ளவரா என்பதுதான் போலும்!
எப்படி அதிகார மண்டலம், காவி மண்டலமாக ஆக்கப்பட்டு வருகிறது - பல நீதிபதிகளின் தேர்வும்கூட இப்படி அமைந்துள்ளது அண்மைக்காலப் போக்காகவே இருந்து வருகிறது. எங்கும் காவிமயம், எதிலும் காவிமயம் என்ற யதேச்சதிகாரப் பாசிசப் போக்கு ஜனநாயகத்தை, அரசமைப்புச் சட்டத்தையே கேலிக் கூத்தாக்கி விட்டது!
குழப்பத்தை உண்டாக்கியது!
54 வயதான வைத்யா ராஜேஷ் கொட்டேச்சா 2017 ஆம் ஆண்டு மூன்று ஆண்டுகளுக்கு மத்திய ஆயுஷ் அமைச்சரவையின் சிறப்புச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். அவருக்கு மத்தியத் துறைச் செயலாளராக அனுபவம் இல்லாததால், அப்போது சுகாதாரச் செயலாளராக இருந்த சி.கே.மிஸ்ரா ஐ.ஏ.எஸ் - சிறிது காலத்திற்கு நீடிப்பார் என்று மத்திய அரசின் அறிவிப்பு உத்தியோக வட்டாரங்களில் அப்போதிருந்தே - அதாவது வைத்யா ராஜேஷ் கொட்டேச்சா நியமிக்கப்பட்ட (20.6.2017 ஆணைப்படி) முதலே மிஸ்ராவும் நீடிப்பார் என்பது குழப்பத்தை உண்டாக்கியது.
இப்படி திடீரென்று ஒருவரை முக்கிய பதவியில் (Lateral entry) திணிப்பதையும், ஒரே நேரத்தில் இரண்டு அதிகாரிகளின்கீழ் பணியாற்றுவதால் ஏற்படும் இன்னல்கள்பற்றியும், அது நிர்வாகத்தைப் பாழாக்கிவிடும் என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டன.
அதோடு இவரது மனைவி, இந்த அமைச்சகத்தின்கீழ் உள்ள ஓர் இன்ஸ்டிடியூட்டில் பணிபுரிவது இன்னொரு இக்கட்டான நிலையைத் தோற்றுவித்துள்ளது.
இந்நிலையில், கடந்த 2020 மே மாதம் அவருக்குப் பணி நீட்டிப்பு வழங்கி, மீண்டும் உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நிர்வாக முறைகேடான நியமனம் செய்ததைப்பற்றி ஏனோ வாய் திறக்கவில்லை!
1988 இல் ஜெய்ப்பூரில் உள்ள சக்ரபாணி கிளினிக் தொடக்க விழாவின்போது வைத்யா ராஜேஷ் கொட்டேச்சா, மோடியை - அவர் பி.ஜே.பி. பொதுச்செயலாளராக இருந்தபோதே சந்தித்திருக்கிறார். ‘‘சிலர் சொன்னார்கள், நீங்களும் குஜராத்தி, அவரும் குஜராத்தி என்பதால் நீங்கள் அழைத்தால் வருவார் என்று கூறினார்கள். அழைத்தேன், வந்தார்; அது முதலே பழக்கம். ஐ.ஏ.எஸ்., ஐ.ஏ.எஸ். அல்லாதவர் என்று பிரித்துப் பேசுவதை என்னால் ஏற்க முடியாது. அது சரியானதல்ல’’ என்று 2017 இல் கொட்டேச்சா கருத்து கூறியுள்ளார்.
மற்ற நேரங்களில் ஓங்கிக் குரல் கொடுக்கும் ஐ.ஏ.எஸ். அமைப்பினர், இதுபோன்ற நிர்வாக முறைகேடான நியமனம் செய்ததைப்பற்றி ஏனோ வாய் திறக்கவில்லை.
‘‘ஆர்.எஸ்.எஸ். கொள்கை வகுப்பாளர்களில் ஒருவரான காலஞ்சென்ற நானாஜி தேஷ்முக் என்பவர்தான் என் வழிகாட்டி! என் தந்தை போன்றவர். அவர்தான் என்னை மகாத்மா காந்தி சித்ரகூடத்து கிராமோதயா பல்கலைக் கழகத்தில் சேர்த்தார் (1991-1998). நானாஜி தேஷ்முக் உருவாக்கியதுதான் அந்த பல்கலைக் கழகம்!’’ என்றெல்லாம் தனது ஆர்.எஸ்.எஸ். தொடர்பை பெருமையாகச் சொல்லிக் கொள்பவர்தான் இந்தக் கொட்டேச்சா! (‘பைனான்சியல் எக்ஸ்பிரஸ்’, ஜூலை 9, 2017).
ஆயுஷ் முறை மூலம் அறுவை சிகிச்சை செய்யாமலேயே கருக்கலைப்பு செய்வதை ஏற்கும் புதிய சட்ட வடிவை, எம்.பி.பி.எஸ். மருத்துவர்கள் எதிர்த்ததால், தற்சமயம் நிலுவையில் உள்ளது. இச்சட்டத்தைக் கொண்டு வருவதற்கும் பலமுறை இவர் முயற்சித்து வருகிறார்.
எப்படியெல்லாம் மக்களின் நலவாழ்வு மத்திய அரசிடம் சிக்கி சின்னாபின்னம் ஆகி வருகிறது. மேலும், இவர்களுக்குத் தமிழ்மேல் எரிச்சல்; தமிழ் மருத்துவ முறை சித்த வைத்தியம் என்றால், சீண்டக் கூடாத ஒருவகை ‘‘தீண்டாமை’’ அல்லது ஏனோ ஒருவகை ஒவ்வாமை அணுகுமுறை!
நாடு எங்கே செல்கிறது?
மத்திய அரசு நியமனங்களில் ‘தகுதி திறமை’ எல்லாம் அவர் ‘காவியரா’ என்பதற்கே முதலில் முன்னுரிமை என்றால், நாடு எங்கே செல்கிறது? புரிந்துகொள்ளுங்கள்!
விளக்கேற்றினோம்; கைதட்டினோம்; கரோனா பன்மடங்கு அதிகரித்து, உயிர்ப்பலியில் அமெரிக்காவுடன் போட்டியிடும் பரிதாப நிலை என்று சொல்லும்போது, கரோனா தொற்றைவிட, காவித் தொற்று படுமோசமாக பரவிவரும் கொடுமையே கொடுமை!” இவ்வாறு ஆசிரியர் கி.வீரமணி குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!