India

திருவனந்தபுர ஏர்போர்ட்டை அதானியிடம் ஒப்படைக்க கேரள அரசு ஒத்துழைக்காது - பிரதமருக்கு பினராயி விஜயன் கடிதம்

பாஜக தலைமையிலான மத்திய அரசு ஆட்சியமைத்ததில் இருந்தே நாட்டின் பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதையே குறியாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

இதனால் ஏராளமானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொள்ளாமல் கார்ப்பரேட் முதலாளிகளான அம்பானி, அதானி குழுமத்திற்கு அரசு நிறுவனங்களை குத்தகைக்கு விட்டு வருவதற்கு அரசியல் கட்சிகள், சமூக நல ஆர்வலர்கள், பொருளாதார ஆய்வாளர்கள் என பலரும் கடுமையாக கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கேரளாவின் திருவனந்தபுர விமான நிலையத்தை அதானி குழுமத்துக்கு 50 ஆண்டுகள் குத்தகைக்கு விட ஒப்புதல் அளித்துள்ளது மோடி அரசின் அமைச்சரவை. இதோடு கவுஹாத்தி, ஜெய்ப்பூர் விமான நிலையங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

modi amith shah

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், இந்த அனுமதியை கைவிட வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், “2003ம் ஆண்டு சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அளித்த உத்தரவாதத்தை மீறி திருவனந்தபுர விமான நிலையத்தை அதானி குழுமத்துக்கு குத்தகைக்கு விடுவது முறையற்றது. மாநில அரசின் வாதங்களை கருத்தில் கொள்ளாமல் அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பது ஒருதலைபட்சமானது. இதற்கு கேரள அரசு ஒத்துழைப்பு நல்காது.

திருவனந்தபுர விமான நிலையத்தின் முக்கிய பங்குதாரராக மாநில அரசு. ஏற்கெனவே கொச்சி, கண்ணூர் ஆகிய விமான நிலையங்களை மாநில அரசு சிறப்பாக நிர்வகித்து வருவது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படி இருக்கையில் திருவனந்தபுர விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும். இந்த முடிவு மாநில மக்களின் விருப்பதிற்கு எதிராக உள்ளது. ஆகையால் இந்த விவகாரத்தில் நீங்கள் தலையிட்டு மறுபரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: NEP2020-ஐ அமல்படுத்த தீவிரம்: மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பெயரை கல்வி அமைச்சகமாக மாற்றியது மோடி அரசு!