India
“ஸ்டெர்லைட் ஆலையால் கிடைக்கும் பொருளாதாரத்தைவிட சூழலை காப்பதே முக்கியம்” - 815 பக்க தீர்ப்பின் சாராம்சம்!
அபாயகரமான தொழிற்சாலையை நிறுவ ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு அடிப்படை உரிமையே இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து, நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு பிறப்பித்த 815 பக்க தீர்ப்பில், தற்போதைய இடத்தில் ஸ்டெர்லைட் ஆலை அமைத்திருக்க கூடாது. காற்று மாசு ஏற்பட்டுள்ளதால் ஆலையின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என 1998ம் ஆண்டு நீரி அறிக்கையின் அடிப்படையிலேயே, ஆலையை மூட உத்தரவிடப்பட்டதாகச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கிட்டத்தட்ட 22 ஆண்டுகள் தூத்துக்குடி பகுதியில் மாசு ஏற்படுத்தியுள்ளதாகவும், 16 ஆண்டு 92 நாட்கள் மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதியில்லாமல், நீதிமன்றம் மற்றும் தீர்ப்பாய உத்தரவுகளின் அடிப்படையிலேயே ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வந்தது என்பது அதிர்ச்சிகரமான உண்மையாக உள்ளது எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
ஆலையை மூட தடைகள் பிறப்பித்திருந்த போதிலும், அந்த நேரத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய ஒப்புதலை ஆலை நிர்வாகம் பெறாமல், நீதிமன்ற தடை உத்தரவை வைத்து ஆலையை இயக்கி உள்ளதாகவும், ஆலையை கண்காணிக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் தவறிவிட்டதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு அரசு எடுத்த முடிவு நியாயமானது எனவும், அதில் எந்த தவறும் இல்லை எனவும் குறிப்பிட்ட நீதிபதிகள், அபாயகரமான கழிவு குறித்து ஸ்டெர்லைட் நிர்வாகம், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லாதது, சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பதே உண்மை எனவும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
கழிவு மேலாண்மைக்கு போதிய வசதிகளை ஸ்டெர்லைட் நிறுவனம் ஏற்படுத்தவில்லை எனவும், ஆலையை முறையாக கண்காணிக்க தவறியது மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தவறே எனவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஆலையை பராமரிக்க மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்த ஸ்டெர்லைட் கூறும் கதை நம்பும்படியாக இல்லை எனவும், ஆலையை சுற்றியுள்ள பகுதி மக்களின் உடல்நலத்தை ஆலை நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை எனவும் குறைகூறியுள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிட்டால் இந்தியாவின் தாமிர தேவையை பூர்த்தி செய்ய முடியாது, பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற ஆலை நிர்வாகத்தின் வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற நீதிபதிகள், அதிக அளவில் மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலை தொடர்ந்து இயங்க அனுமதிக்கும் விவகாரத்தில் பொருளாதார பாதிப்புகளுக்கு எந்தப் பங்கும் இல்லை எனவும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதே முக்கியம் எனவும் நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து மக்களை சமாதானப்படுத்தும் நோக்கிலேயே ஆலை மூடப்பட்டது என்ற வாதத்தை ஏற்கமுடியாது என்ற நீதிபதிகள், அபாயகரமான தொழிற்சாலையை நிறுவ ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு அடிப்படை உரிமையே இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள 5 கிலோமீட்டர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கண் எரிச்சல், தொண்டை பாதிப்பு உள்ளிட்ட உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி 80,725 பேரிடம் நடத்திய ஆய்வில் மற்ற பகுதியில் வசிப்பவர்களை விட 1,000 மடங்கு மூளை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் பகுதியைச் சுற்றியுள்ள மக்களின் உடல்நலத்தை ஆலை நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என நீதிபதிகள் குற்றம்சாட்டினர்.
ஒரு நாளைக்கு 1,200 டன் தாமிரம் உற்பத்தி செய்யும் நிலையில் அதன் மூலம் 2,400 டன் கழிவு வெளியேற்றப்படுகிறது, இதன் மூலம் ஆண்டுக்கு 8 லட்சம் டன் கழிவு வெளியேற்றப்படுவதாவும் இது அதிர்ச்சிகரமானதாக உள்ளதாகவும் நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
அரசியல் காரணங்களுக்காக ஆலை மூடப்பட்டது எனக் கூறினால், இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஆலை நிறுவப்பட்டதும் அரசியல் காரணங்களுக்காகத்தான் என எண்ணவேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
உள்நோக்கம் மற்றும் அரசியல் காரணங்களுக்காக ஆலை மூடப்பட்டது என்பது நிரூபிக்கப்படவில்லை எனவும், தூத்துக்குடியில் மிகப்பெரிய நிறுவனமான ஸ்டெர்லைட் நிறுவனம், தங்களை மட்டுமே பழிவாங்குவதாக கூறுவதும் ஏற்கத்தக்கதல்ல எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, ஆலையை நிரந்தரமாக மூட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவு சரியே எனவும், மாசு கட்டுப்பாட்டு வாரிய உத்தரவை எதிர்த்தும் அரசாணையை எதிர்த்தும் வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன எனவும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!