India
கல்வி, சுற்றுச்சூழலை அடுத்து மீனவர்களைப் பலி கொடுக்க தயாராகும் ‘NFP’ : மோடி அரசின் அடுத்த நாசகார திட்டம்!
மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு கடந்த ஆட்சியின்போது நிறைவேற்ற முடியாமல் போன திட்டங்கள் அனைத்தையும் தனக்கிருக்கும் பெரும்பான்மை பலத்தினால் இந்த ஆட்சியில் படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. பா.ஜ.க அரசு கொண்டு வரும் திட்டங்கள் யாவும் கார்ப்பரேட் நலன் சார்ந்ததாகவும் ஆர்.எஸ்.எஸ்ஸின் இந்துத்வா சித்தாந்தங்களின் அடிப்படையிலும் இருந்து வருகிறது.
அதன்படி, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதும், குடியுரிமை சட்டம் மூலம் மக்களை பிளவுபடுத்தும் வேலைகளையும் செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது மாணவர்களின் நலனை பாதிக்கும் வகையில், வர்ணாசிரம கொள்கையின்படி புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்துள்ளது.
அந்த புதிய கல்விக் கொள்கையில் ஏழை மாணவர்களின் கல்வி கனவினைத் தகர்க்கும் வகையிலும் தமிழகம் போன்ற மாநிலங்களில் மும்மொழிக் கொள்கையைப் பாடத்திட்டத்தின் வழியாகக் கொண்டு வந்து இந்தி, சமஸ்கிருத மொழிகளை திணிக்கப் பார்க்கிறது.
கொரோனா பேரிடரைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் உலக நாடுகளின் அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. ஆனாலும் பெருந்தொற்றை சமாளிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்தச் சூழலிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டாத பா.ஜ.க அரசு, ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி சில அவசர சட்டங்களையும், திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறது.
அந்தவகையில் ஊரடங்கு காலத்தில் புதிய கல்விக் கொள்கைக்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை 2020 இல் சட்டத் திருத்தம் மேற்கொள்ள வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. மேலும், தேசியக் கடல் மீன்வள ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை வரைவு மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசின் இத்தகைய மோசமான திட்டத்திற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு மீனவர் சங்க தலைவர் லோகநாதன் கூறுகையில், “தேசிய கடல் மீன்வள சட்ட மசோதா மூலம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இந்த சட்டத்தை அமல்படுத்தினால் மீனவர்களிடமிருந்து கடல் பறிக்கப்பட்டு கடலில் மீனவர்கள் கால் கூட வைக்கமுடியாத நிலைமை ஏற்படும்.
அதாவது இந்தச் சட்டத்தின்படி, கட்டுமரங்களை ‘கப்பல் பதிவுச் சட்டத்தின் கீழ்’ பதிவு செய்யவேண்டும் எனக் கூறுகிறது. கப்பல் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யவேண்டும் என்றால் கப்பலில் இருக்கும் மாலுமி இருக்கவேண்டும்.
டிரைவிங் லைசென்ஸ் எடுக்கவேண்டும்; தொழில்நுட்ப வல்லுநர்கள் இருக்கவேண்டும் என அந்த சட்டத்தில் உள்ளது. இது எதுவுமே கட்டுமரங்களில் சாத்தியமில்லை. அதுமட்டுமல்லாது, இயந்திரங்கள் கொண்டு இயங்கும் எல்லாக் கலன்களுமே கப்பல் எனக் குறிப்பிடப்படுகிறது.
ஆனால் தமிழகம் உட்பட பல பகுதிகளில் கட்டுமரங்கள், வள்ளங்கள் ஆகியவற்றுக்கு வெளிப்பகுதியில் இயந்திரம் பொருத்தி இயக்கப்படுகிறது. அதனால் அதனையும் கப்பல் என்ற கணக்கில் எடுத்துக்கொள்வார்கள்.
மேலும், விசைப்படகுகள் கடலில் 12 நாட்டிக்கல் மைலுக்கு மேல் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்படும்; 12 நாட்டிக்கல் மைலை தாண்டிச் செல்ல ஒவ்வொரு முறையும் அனுமதி பெற வேண்டிய நிலை உருவாகும். அந்த பகுதிகளில் வெளிநாட்டு மீன்பிடிக்கும் கப்பல்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். இதனால் சொந்த நாட்டு மக்கள் நிர்கதியாவார்கள்.
இந்த மசோதா மூலம், அதிகாரிகள் எப்போது வேண்டுமானாலும் கலன்களை ஆய்வு செய்யமுடியும். ஆவணங்கள் பெறாமல் மீன்பிடிக்கச் சென்றால் மீனவர்களைக் கைது செய்து 6 மாதம் சிறையில் அடைக்கவும், இந்த புதிய மசோதா வழிவகை செய்கிறது.
மேலும் 2020-ம் ஆண்டுக்குள் மீனவர்களுக்கு வழங்கப்படும் மானியங்களையும் நிறுத்தும் முனைப்பில் இந்த மசோதா கொண்டுவரப்படுகிறது. இந்த மசோதா தொடர்பாக தமிழகத்தில் ரகசியமாக கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது. அதில் பங்கேற்ற அனைத்து மீனவர்கள் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகளை அழைத்து கருத்து கேட்காமல், யாரோ ஒரு சிலரை அழைத்து கருத்துக்கேட்டு, அந்த கருத்துக்களை அரசுகளுக்கு அனுப்பி வைப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது மிகப்பெரும் சதியாகும்.
எனவே இந்த கருத்துக் கேட்பு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும் கருத்து கேட்பு கூட்டத்தை வெளிப்படையாக மீண்டும் நடத்த வேண்டும். இந்த மசோதா மூலம் ஆதி சமூகமான மீனவர்களை மீன்பிடித் தொழிலில் இருந்து அப்புறப்படுத்தி விட்டு, அந்த இடத்தை பன்னாட்டுக் கார்ப்பரேட் கம்பெனிகளிடம் மீன்வளத்தை ஒப்படைப்பதற்கான செயல்திட்டமாக இந்த மசோத அமைகிறது” எனத் தெரிவித்தார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!