India
“தமிழக மாணவர்களின் உடல் தனி விமானம் மூலம் கொண்டுவரப்படும்” : டி.ஆர்.பாலுவிடம் அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி!
ரஷ்ய நாட்டில் உயிரிழந்த, தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களின் உடல்களை, உடனடியாக தமிழகத்திற்குக் கொண்டுவரத் திரு. டி. ஆர். பாலு எம்.பி., அவர்கள் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.
ரஷ்யாவின், வோல்கோகிராட் மருத்துவ பல்கலைக்கழகத்தில், மருத்துவ மேற்படிப்பு படித்து வந்த கடலூரைச் சேர்ந்த ஆர்.விக்னேஷ், திருப்பூரைச் சேர்ந்த முகமது ஆசிக், சேலத்தைச் சேர்ந்த மனோஜ் ஆனந்த் மற்றும் மருத்துவ படிப்பு படித்த சென்னையைச் சேர்ந்த ஸ்டீபன் லிபாகு ஆகியோர், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, வால்கா ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.
பெற்றோர்களின் வேண்டுகோளுக்கிணங்க, உயிரிழந்த, தமிழக மருத்துவ மாணவர்களின், உடல்களை, உடனடியாக தமிழகத்திற்குக் கொண்டுவர, ரஷ்யாவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஆணை பிறப்பிக்க வேண்டுமென, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, முன்னாள் மத்திய அமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற குழுத் தலைவரும், திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை இன்று காலை (11-8-2020) நேரில் சந்தித்து கடிதத்தின் மூலம் வலியுறுத்தினார்.
மேலும், டி.ஆர். பாலு எழுதிய மற்றுமொரு கடிதத்தில், சென்னை கொளுத்துவஞ்சேரியைச் சேர்ந்த ஆர். சந்தோஷ் குமார், மலேசியாவில் நுழைவு விசா முடிவுற்ற காரணத்தால், கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் தாயகம் திரும்ப ஆவன செய்ய வேண்டுமெனவும் வெளியுறவுத்துறை அமைச்சரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழக மருத்துவ மாணவர்களின், உடல்களை, உடனடியாக தமிழகத்திற்குக் கொண்டுவர ரஷ்யாவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளின் உதவியுடன் ஆவன செய்வதாகவும், ஆர். சந்தோஷ் குமார் மலேசியாவிலிருந்து தாயகம் திரும்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் டி.ஆர் பாலுவிடம் உறுதி அளித்துள்ளார்.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!