File Image
India

உயர்கல்வியில் மத்திய அரசு தலையீடு : கூட்டாட்சி தத்துவம் சிதையும்; கல்வித்துறை வர்த்தகமாகும் - டி.ஆர்.பாலு

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படியும், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் சார்பாகவும், முன்னாள் மத்திய அமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அவர்களை, நேற்று (10-08-2020) நேரில் சந்தித்து, "தேசிய கல்விக் கொள்கை 2020"-ஐ இந்திய அரசு கைவிட வேண்டும் அல்லது, இக்கல்விக் கொள்கையில், தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய கடிதத்தை வழங்கினார்.

அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதன் விவரம்:

“சமஸ்கிருதம் உள்ளிட்ட மும்மொழிக் கொள்கை தமிழ்நாட்டிற்கு எந்த வகையிலும் ஏற்புடையதல்ல என்றும், மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் கல்விச் சுமையை அதிகரிக்கும் மூன்றாம், ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள், உளவியல் ரீதியான பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்றும், இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினத்தவர் ஆகியோருக்கான இட ஒதுக்கீடு குறித்து, தேசிய கல்விக் கொள்கையில் ஏதும் குறிப்பிடப்படவில்லை என்றும், தொழிற் கல்வியை ஆரம்ப வகுப்புகளில் புகுத்துவது என்பது, ஏற்கனவே தமிழக அரசால் கைவிடப்பட்ட ''குலக் கல்வித் திட்டத்திற்கு'' ஒப்பானதாகும் என்றும், இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பயின்று வரும் 130 லட்சம் மாணவர்களில், 60 சதவீதத்திற்கும் மேலானவர்கள் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் கணினி வழிக் கற்பித்தலுக்கு உட்படுத்தப்பட்டால் நகர்ப்புற மாணவர்களுடன் சமநிலையை எட்டுவது மிகவும் கடினம் என்றும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

உயர்கல்வியில் மத்திய அரசின் தலையீடு அதிகரிக்கும் நிலையில், மாநிலங்களின் உரிமையும், கூட்டாட்சித் தத்துவமும் வெகுவாகப் பாதிக்கப்படுவதோடு, தன்னாட்சி பெற்ற தனியார் கல்வி நிறுவனங்கள் அதிகரிக்கப்பட்டால், கல்வித்துறை வர்த்தக நோக்கில் செயல்படத் துவங்கும்.

எனவே அனைத்துத் தரப்பினரின் நலன்களை கருதியும், வெவ்வேறு மாநிலங்களின் கல்வி உரிமையைப் பாதுகாக்கவும், "தேசிய கல்விக் கொள்கை 2020"-ஐ மீள் ஆய்வு செய்வதோடு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், விரிவாக விவாதிக்கப்பட்டு, தேவையான திருத்தங்களை மேற்கொண்ட பிறகே, இக்கொள்கையை நிறைவேற்ற வேண்டும் என அக்கடிதத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Also Read: “தமிழக மாணவர்களின் உடல் தனி விமானம் மூலம் கொண்டுவரப்படும்” : டி.ஆர்.பாலுவிடம் அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி!