India

ஹைதராபாத் எடுத்துச் செல்லப்படும் அம்மோனியம் நைட்ரேட் - சென்னை மக்களின் அச்சத்திற்கு தீர்வு!

சென்னை மணலியில் சரக்கு பெட்டக முனையத்தில் 37 கண்டெய்னர்களில் வைக்கப்பட்டுள்ள அம்மோனியம் நைட்ரேட்டை முதற்கட்டமாக 10 கண்டெய்னர்களில் சாலை மார்க்கமாக ஹைதராபாத் எடுத்து செல்வதற்கான நடவடிக்கைகள் இன்று தொடங்கப்பட்டது.

லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்த அம்மோனியம் நைட்ரேட் வெடித்து 150 பேர் பலியான நிலையில், சென்னை மணலியில் உள்ள சரக்கு பெட்டக முனையத்தில் 37 கண்டெய்னர்களில் வைக்கப்பட்டுள்ள 740 டன் அம்மோனியம் நைட்ரேட்டின் பாதுகாப்பு குறித்து அச்சம் எழுந்தது.

இதையடுத்து, அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பான முறையில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதா என சுங்கத்துறை அதிகாரிகள், காவல்துறையினர், வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இதற்கிடையே, சுங்கத்துறை அதிகாரிகள், அம்மோனியம் நைட்ரேட் கிடங்கு பகுதியில் இரண்டு கிலோமீட்டர் பரப்பளவிற்கு குடியிருப்புப் பகுதி இல்லையென என விளக்கம் கொடுத்திருந்தனர். ஆனால் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் அறிக்கை மூலம் 700 மீட்டர்களுக்குள்ளாகவே சுமார் 12,000 நபர்கள் வசிப்பது தெரியவந்தது.

இந்த நிலையில், அவற்றை அப்புறப்படுத்தும் நடவடிக்கையாக, சேமிப்புக் கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டுள்ள அம்மோனியம் நைட்ரேட் ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு E-Auction முறையில் ஏலம் விடப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் சுரங்கப் பணிகளில் அம்மோனியம் நைட்ரேட்டை வெடிபொருளாகப் பயன்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 10 கண்டெய்னர்களில் அம்மோனியம் நைட்ரேட்டை சாலை மார்க்கமாக எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், 3 நாட்களில் முழுமையாக எடுத்துச் செல்லப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Also Read: சென்னையில் பாதுகாப்பில்லாத நிலையில் அம்மோனியம் நைட்ரேட் : பொய் சொல்கிறதா சுங்கத்துறை? - உண்மை என்ன?