India

கொரோனாவால் உ.பி அமைச்சர் பலி : ராமர் கோயில் அடிக்கல் நாட்டுவிழாவிற்கு மும்முரம் காட்டும் யோகி அரசு!

புதன்கிழமை ராமர் கோயில் அடிக்கல் நாட்டுவிழா நடைபெறவுள்ள நிலையில் மாநில அமைச்சர் ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் தொழில்கல்வி துறை அமைச்சராக இருந்தவர் கமலா ராணி வருண். 62 வயதான இவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 18ம் தேதி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

இரண்டு வாரமாக சிகிர்ச்சையில் இருந்த அவர் சிகிர்ச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார். நாட்டில் மாநில அமைச்சர் ஒருவர் கொரோனாவுக்குப் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து ராமர் கோயில் அடிக்கல் விழா பணிகளை இன்று பார்வையிட திட்டமிட்டிருந்த முதலமைச்சர் யோகி ஆதித்யனாத் அதனை ரத்து செய்துள்ளார்.

முன்னதாக அயோத்யாவில் புரோகிதர் ஒருவருக்கு கடந்த வாரம் கோரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது.

இதுவரை 82 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு 1630 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர். பலரது எதிர்ப்பையும் மீறி பிரதமர் கலந்து கொள்ளும் அடிக்கல் விழாவை புதன்கிழமை நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அமைச்சரின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “நாடு முழுவதும் ஊரடங்கு... உ.பியில் ராமருக்கு சிலை வைத்த முதல்வர் யோகி” : மோடி பேச்சை கேட்காத பா.ஜ.க!?