India
''நலம் விசாரிக்கக்கூட பயந்தார்கள்..'' : கொரோனா வார்டில் பணியாற்றிய ஒரு இளம் பெண் மருத்துவரின் அனுபவங்கள்!
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் முதுநிலை மருத்துவம் படித்துவரும் இளம் பெண் மருத்துவர் மிதுனா. கேரள மாநிலத்தைச் சேர்ந்த இவர் கொரோனா வார்டில் பணியாற்றியபோது பாதிக்கப்பட்டார்.
கொரோனா நோய் தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ள இவர் தற்போது, மீண்டும் கொரோனா நோயாளிகளுக்கு தொண்டாற்றிட கொரோனா வார்டிலேயே தனது பணியை மீண்டும் தொடக்கியுள்ளார். கொரோனா தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்ட மிதுனாவின் அனுபவங்கள் வியப்படையச் செய்கின்றன.
இதுபற்றி இளம் பெண் மருத்துவர் மிதுனா தனது வார்த்தைகளில்...
"கொரோனா வார்டில் பணியாற்றியபோது, எனக்கு பாதிப்பு ஏற்பட்டது. சோதனை செய்தார்கள். தனிமைப்படுத்திக் கொண்டேன். எனக்கு கொரோனா தொற்று இல்லை என்ற வார்த்தையை கேட்க எனது கைபேசியின் அழைப்பை எதிர்பார்த்து அன்று காத்திருந்தேன். ஆனால், எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால் என் மனதில் பயம் தோன்றியது. என் வாழ்க்கையின் மறக்க முடியாத நாளாக மாறியது மே 30 ஆம் தேதி. அன்று தான் எனக்கு பரிசோதனை செய்யப்பட்டு தொற்று இருப்பது உறுதியானது. ஜிப்மர் மருத்துவமனையில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட முதல் மருத்துவராக நான் இருந்தேன்.
கடும் அதிர்ச்சியுட்ன் இருந்த எனக்குள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டேன். என்னுடன் தங்கியிருந்த தோழியின் ஆதரவு மட்டுமே, அன்று என்னை சகஜ நிலைக்குத் திரும்ப உதவியது. என் பெற்றோரிடம் இதுபற்றி சொன்னால் அவர்கள் கலக்கமடைந்து விடுவார்கள் என்பதால் எதனையும் சொல்லவில்லை.
இருப்பினும், எனது சகோதரி, சகோதரை மட்டும் தொடர்பு கொண்டு இதனைத் தெரிவித்தேன். எனது பேராசிரியர்கள், செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் இந்த தொற்றிலிருந்து குணமடைய நான் உங்களுக்காக பிரார்த்தனை செய்வேன் என்று கூறிய எலக்ட்ரீஷியன் அனைவருக்கும் என் நன்றியை தெரிவிக்கிறேன். அப்போது தான், இந்த நோய் தொற்றை எதிர்த்து நான் தனியாக போராட்டவில்லை என்பதை எனக்கு உணர்த்தியது. மேலும், இதுபோன்ற சூழலில் எனக்கு தேவையான மன தைரியத்தை கொடுத்தது.
மருத்துவ துறையினரை ஆதரிக்க கைதட்டுவதும் அல்லது விளக்கேற்றுவதும் மட்டும் போதாது. உங்களுக்கு அருகிலுள்ள ஒருவர் நோய் தொற்றுக்கு உள்ளாகும்போது அவரது நிலையறிந்து ஒற்றுமையைக் காட்டுவதே உண்மையான ஆதரவாகும். எனக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டபோது, எனது வீட்டுக்கு அருகாமையில் இருந்த சிலர் பிரச்சினை செய்துள்ளனர். ஆனால், அந்த நபர்கள் தான் சில நாட்களுக்கு முன்பு கைதட்டியும், விளக்கு ஏற்றியும் மருத்துவ துறையினரை கொண்டினர்.
அதே சமயம் மனிதர்களில் பலர் தங்கள் மனிதாபிமானத்தை இழக்கவில்லை என்பதையும் உணர்ந்தேன். நான் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் மிகவும் ஆதரவாக இருந்தார். வீட்டுக்கு திரும்பி வந்தபோது, அக்கம்பக்கத்தல் இருந்த சிலர் என்னுடன் ஆதரவாக பேசினார்கள். கொரோனா நோயாளிகளுடன் தொடர்புடைய களங்கத்தின் கதைகளால் உருவாக்கப்பட்ட பல சந்தேகங்களுடன் கொரோனா தொற்றிலிருந்து நான் குணமடைந்தேன்.
இதையடுத்து, நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கொரோனா வார்டில் பணியாற்ற தொடங்கினேன். ஆனால், உண்மையில் ஒவ்வொரு நாளும் என்னைச் சுற்றியுள்ளவர்களும் 'ஹாய்' சொல்வதை நிறுத்துவது எனக்கு தெரிந்தது. நான் நன்றாக இருக்கிறேனா? என்று கேட்கமாட்டார்கள். என் உடல்நலத்தை கவனித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தமாட்டார்கள். ஒரு சிலர் பயத்துடன் விலகிச் செல்வதை நான் உணர்ந்தேன்.
இருந்தாலும் பரவாயில்லை, அது அவர்களுடைய பயத்தின் காரணமாக இருக்கலாம். பிறகு, நான் நலமாக பிரார்த்தனை செய்து கொண்டிருந்த பலரும் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று நினைக்கும்போது மனதுக்கு அமைதியை கொடுத்தது. கொரோனா வார்டில் பணியாற்ற மீண்டும் செல்ல நான் பயப்படவில்லை என்று சொல்ல முடியாது. நரம்புகளில் சிறிதளவு தளர்வும், வயிற்றில் பயம் கலந்த உணர்வும் இருந்தது. இது பொதுவாகவே மனிதர்களின் இயல்பு. ஆனால், எனக்குள் இருக்கும் உந்துதல் சக்தி தான், அந்த பயத்தை போக்க எனக்கு உதவுகிறது.
சுற்றியுள்ள மக்களுக்கு உதவுவதற்கான உத்வேகத்தையும், வைரஸை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்ற எடுத்துக்காட்டு மூலம், நோயாளிகளை வழிநடத்துவது என்பது மருத்துவ நிபுணராக எனது கடமையாக பார்க்கிறேன். ஆகவே, இப்போது என் நோயாளிகளுக்கு நம்பிக்கை ஊட்டி அவர்களை பயத்திலிருந்து நீக்க உதவும் ஒரு எடுத்துக்காட்டாக என்னை மேற்கோள் காட்டி, அதிக நம்பிக்கையுடன் அவர்களுக்கு உறுதியளிக்க உதவுகிறது. கொரோனா தொற்றுக்கு ஆளான நோயாளிகள் சீக்கிரம் குணமடைவர் என்று அவர்களிடம் உணர்வுபூர்வமான நம்பிக்கையை என்னால் ஏற்படுத்த முடிகிறது.
இந்த நேரத்தில் நான் சொல்லிக் கொள்ள விரும்புவது எல்லாம், உங்களுடன் பணியாற்றுபவர்கள் அல்லது நண்பர்களில் யாருக்காவது தொற்று ஏற்பட்டால், தயவுசெய்து உங்களுக்கு இது எப்படி தொற்றியது? உன்னால் எத்தனை பேருக்கு தொற்று ஏற்பட்டது? போன்ற கேள்விகளைக் கேட்டு அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்காதீர்கள். தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இதுபோன்ற நேரங்களில் இனம் புரியாத குழப்பத்துடனும், பயத்துடனும் இருப்பார்கள். ஆகவே, அதற்கு பதிலாக ஆதரவாக பேசி, அவர்களுக்கு விரைவில் சரியாகிவிடும் என்று நம்பிக்கை கொடுங்கள் ’’என்றார்.
தன்னமிக்கையுடன் கொரோனாவை எதிர்த்துப் போராடி வென்று, மீண்டும் கொரோனா நோயாளிகளுக்காக சேவையாற்றத் தொடங்கியிருக்கும் இளம் பெண் மருத்துவர் மிதுனாவை இந்த நேரத்தில் வாழ்த்தி, வரவேற்பது நமது கடமை.
Also Read
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!