India

“ஆசிரியர் சமூகத்தை மனஉளைச்சலுக்கு உள்ளாக்கும் அரசு ஆணையைத் திரும்பப் பெற வேண்டும்” : வைகோ வலியுறுத்தல்!

உயர் கல்வி பயின்ற ஐந்தாயிரம் ஆசிரியர்கள் விதிமுறைகளை மீறினார்கள் என்று நடவடிக்கை எடுக்க தொடக்கக் கல்வித்துறை பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை உள்ளிட்ட பாடங்களை கற்பிப்பதற்காக, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் 16,549 பகுதிநேர ஆசிரியர்களை தமிழக அரசு ஆணை எண் 177ன் படி, 11.11.2011 அன்று வேலைவாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில் நேர்காணல் மூலம் பணியமர்த்தப்பட்டனர்.

பகுதிநேர ஆசிரியர்களான இவர்கள் வாரத்திற்கு மூன்று அரை நாட்கள் பணியாற்றுவார்கள் என்றும், தொகுப்பூதியம் மாதம் ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் அரசாணை எண். 177ன் படி பகுதிநேர ஆசிரியர்கள் வாரத்திற்கு மூன்று அரைநாட்கள் என மாதத்திற்கு 12 அரை நாட்கள் மட்டும் பணி செய்தால் போதும். இந்த வகையில் ஒவ்வொரு பகுதிநேர ஆசிரியரும் அதிகபட்சமாக 4 பள்ளிகளில் பணிபுரியலாம். அதற்கான ஊதியத்தை அந்தந்த பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனை நடைமுறைப்படுத்தியிருந்தால் ஒவ்வொரு பகுதிநேர ஆசிரியருக்கும் மாதம் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.30 ஆயிரம் வரை ஊதியம் கிடைத்திருக்கும். ஆனால் இந்த அரசாணையை கல்வித்துறை அதிகாரிகள் அலட்சியப்படுத்தியே வந்தனர்.

அதன்பின்னர் இன்னொரு அரசாணை (186) பிறப்பிக்கப்பட்டு, பகுதிநேர ஆசிரியர்கள் இரு பள்ளிகளில் மட்டுமே பணியாற்ற முடியும் என்று விதிகள் திருத்தப்பட்டன. இந்த அரசாணையும் நடைமுறைக்கு வரவில்லை. ஏனெனில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் போதுமான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல், காலியாக உள்ளதால், பகுதிநேர ஆசிரியர்கள், ஆசிரியர் இல்லாத வகுப்புகளை கவனிக்குமாறு கட்டாயப்படுத்தப்படும் அவலநிலை தொடர்கிறது. இதனால் பகுதிநேர ஆசிரியர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் வாய்ப்பு மறுக்கப்பட்டு, சொற்ப ஊதியத்தில் நிரந்தர ஆசிரியர்களின் பணியை மேற்கொள்ளுமாறு நிர்பந்திக்கப்படுகின்றனர்.

இவ்வாறு பணிச்சுமையை தாங்கிக் கொண்டு மிக குறைந்த ஊதியத்தில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு 11 மாதங்களுக்கான ஊதியம் மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. மே மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படுவதில்லை.

2011 இல் பணியமர்த்தப்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் 16,549 பேரில் பணி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் மரணமுற்றோர் போக தற்போது 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களே பணியாற்றுகின்றனர்.

சொற்ப ஊதியத்திலேயே 9 ஆண்டுகள் பணிபுரிந்து 10 ஆவது ஆண்டில் பணி தொடரும் பகுதி நேர ஆசிரியர்கள் ரூ. 5 ஆயிரம் ஊதியம் பெற்று வந்த நிலையில், 2014 ஆம் ஆண்டு ரூ.2000, 2017 ஆம் ஆண்டு ரூ.700 என மொத்தம் 9 ஆண்டுகளில் ரூ.2700 மட்டும் ஊதிய உயர்வு பெற்றுள்ளனர்.

தமிழக அரசில் பணிபுரியும் மற்ற தொகுப்பு ஊதியப் பணியாளர்களுக்கும், தின ஊதியப் பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டு வரும் போனஸ் போன்ற பணப் பயன் எதுவும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவது இல்லை.

வெறும் ரூ.7700 ஊதியம் பெற்றுக்கொண்டு கடந்த 9 ஆண்டு காலமாக நிரந்தர ஆசிரியர்கள் போன்று பணிச் சுமையை ஏற்றுக்கொண்டு கடமையாற்றும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் அதிகரித்து வழங்குவதுடன், பணி நிரந்தரம் செய்யவும் தமிழக அரசு முன்வரவேண்டும்.

கடந்த 2017 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் அறிவித்தார். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக அமைச்சரின் வாக்குறுதியைக் காப்பாற்றாமல் தமிழக அரசு மௌனம் காக்கிறது.

தமிழக அரசு தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் நிரந்தர ஆசிரியர்கள், உயர் கல்வி கற்பதற்கு கல்வித்துறையின் அனுமதி வேண்டி விண்ணப்பித்து காத்திருந்தனர். ஆனால், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் ஆசிரியர்களின் இக்கோரிக்கை குறித்து முடிவு எடுக்காததால், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் உயர் கல்வி கற்க முனைந்தனர். இவ்வாறு உயர் கல்வி பயின்ற ஐந்தாயிரம் ஆசிரியர்கள் விதிமுறைகளை மீறினார்கள் என்று நடவடிக்கை எடுக்க தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டிருக்கிறது. ஆசிரியர் சமூகத்தை மனஉளைச்சலுக்கு உள்ளாக்கும் விதத்தில் தொடக்கக் கல்வித்துறை பிறப்பித்த ஆணையைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

முதுநிலைப் பட்டதாரிகளான பகுதிநேர ஆசிரியர்களை வறுமையின் பிடியில் தள்ளுவது கொடுமையாகும். கடந்த 9 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வரும் மே மாத ஊதியத்தை கணக்கிட்டு, பகுதிநேர ஆசிரியர்களுக்கு வழங்குவதுடன், அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: தி.மு.க பற்றி அவதூறான தகவல்களைப் பரப்பும் மதன் ரவிச்சந்திரன் மீது வழக்கு - உதயநிதி ஸ்டாலின் அதிரடி!