India

திப்பு சுல்தான் குறித்த பாடத்தை நீக்கிய கர்நாடக அரசு.. மாணவர்களிடத்தில் மத நல்லிணக்கத்தை ஒழிக்கும் பாஜக!

கொரோனா வைரஸ் பரவலை காரணம் காட்டில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து ஜனநாயகம், மதச்சார்பின்மை, உள்ளாட்சி, பொருளாதாரம் உள்ளிட்ட 30 சதவிகித பாடங்களை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்தது.

இந்த அறிவிப்புக்கு நாடு முழுவதும் பெரும் கண்டனங்களும் எதிர்ப்புகளும் வலுத்தன. எதிர்காலத்தில் மாணவர்கள் அரசின் மக்கள் விரோத சட்டங்களை எதிர்த்து போராட்டத்தில் இறங்கிவிடக் கூடாது என்பதை கருத்தில்கொண்டே குறிப்பிட்ட பாடங்கள் மட்டும் நீக்கப்பட்டுள்ளது எனவும் காட்டமாக விமர்சிக்கப்பட்டது.

Also Read: “இந்துத்வ கோட்பாட்டை திணிக்கவே சிபிஎஸ்இ பாடத்திட்டம் குறைப்பு” - மோடி அரசுக்கு வைகோ கண்டனம்!

சிபிசிஎஸ்இ பாடத்திட்டத்தை குறைத்ததற்கு எதிரான எதிர்ப்புக்குரல்கள் அடங்குவதற்குள்ளேயே பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தில், 7ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இருந்து திப்பு சுல்தான் குறித்த பாடங்களை நீக்கி அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

திப்பு சுல்தானின் வாழ்க்கை வரலாறு, அவரது தந்தை ஹைதர் அலி குறித்த செய்திகள், வரலாற்றுச் சிறப்புமிக்க மைசூர் மற்றும் திப்பு சுல்தானின் ஆட்சி நிர்வாகம் உள்ளிட்டவை பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, திப்பு சுல்தானின் பிறந்த நாள் விழாவை பாஜக அரசு ரத்து செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.