India
மொத்த நாட்டையே அழிவுப்பாதைக்கு அழைத்துச் செல்லும் சதித்திட்டம்-EIA2020: வலுக்கும் எதிர்ப்பு #scrapEIA2020
கொரோனா ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி மோடி அரசு, சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை விதிகள் -2020” என்று வரைவு அறிவிக்கையில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. மோடி அரசு கொண்டுவந்துள்ள இந்த திருத்தங்கள், வளர்ச்சியின் பெயரால் அழிவுப் பாதைக்கு அடித்தளம் அமைக்கும் வகையில் இருக்கின்றன என பலரும் எதிர்க்கத் துவங்கியுள்ளனர்.
அதன் ஒருபகுதியாக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் 2020 - வரைவு அறிவிக்கைக்கு எதிராக ட்விட்டரில் #scrapEIA2020 என்ற ஹேஸ்டேக் மூலம் தங்களின் கருத்துக்களை பொதுமக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். தற்போது #scrapEIA2020, #WithdrawEIA2020 போன்ற ஹேஸ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளனர்.
இ.ஐ.ஏ 2020 சட்ட வரைவுக்கு கடும் எதிர்ப்பு எழ என்ன காரணம்?
கடந்த 1986 இல் நடைமுறைக்கு வந்த சுற்றுச் சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 1994 ஜனவரி 27 இல் வெளியிடப்பட்ட குறிப்பாணையின்படி, சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை சட்ட ரீதியாக கட்டாயமாக்கப்பட்டது.
இதனையடுத்து நடைமுறையில் உள்ள சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை 2006-ல், சில திருத்தங்களைச் செய்து) 2020 மார்ச் 23-ம் தேதி, ஒரு வரைவு அறிவிக்கையை மத்திய பா.ஜ.க. அரசு தயார் செய்தது. அந்த தயார் செய்யப்பட்ட அறிக்கையை ஏப்ரல் 11 ஆம் தேதி அரசு இதழிலும் வெளியிட்டுள்ளது.
இந்த வரைவு அறிவிக்கையின் மீது அரசு இதழில் அறிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள் மக்கள் கருத்து தெரிவிக்கலாம். மாநில அரசுகளும் கருத்துகளை அளிக்க வேண்டும் என்று மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சகம் கூறி இருந்தது.
பின்னர் சூழலியாளர்கள், கொரோனா தொற்று பாதிப்பு காரணம் வைத்து மோடி அரசு அவசரகதியாக சட்டத்தை திருத்தி தனக்கு சாதகமாக்கிக்கொள்ள பார்க்கிறது என குற்றம் சாட்டினார்கள். பின்னர் கால அவகாசத்தை 2020 ஜூன் 30 வரை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டது மத்திய அரசு.
இந்நிலையில், “சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை விதிகள் -2020” என்று வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள மூன்று முக்கியத் திருத்தங்கள் மத்திய அரசுக்கு எதேச்சதிகாரமான அதிகாரங்களை வழங்கும் வகையில் உள்ளதை சூழலியாளர்கள் கண்டிக்கத் துவங்கினார்கள்.
மோடி அரசு அறிக்கையில் திருத்தியவற்றில், முதலாவதாக சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை முன்வைக்காமலும், மக்களிடம் கருத்துக் கேட்காமலும் நடைமுறையில் செயல்பாட்டில் உள்ள புதிய திட்டங்கள், பழைய திட்டங்களின் விரிவாக்கங்கள் - கட்டுமானப் பணிகள் இவற்றை எவ்வித தடையுமின்றி தொடரலாம். அரசுக்கு தண்டத்தொகை செலுத்தினால் போதும் அனுமதி கிடைத்துவிடும் எனக் குறிப்பிட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது, இரண்டாவதாக 70 மீட்டர் வரையிலும் சாலைகளை அகலப்படுத்துதல், விரிவாக்கத் திட்டங்கள், நீராதாரக் கட்டமைப்புகள், பெரும் கட்டுமானத் திட்டங்கள் போன்ற 14 வகையான பணிகளுக்கும், குறிப்பாக, “சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிப்பவை என்று கருதப்படக்கூடிய திட்டங்களுக்கும்” கூட இனி சுற்றுச் சூழல் மதிப்பீட்டு அறிக்கை முன் வைக்கத் தேவை இல்லை. சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் முன் அனுமதி தேவை இல்லை.
இதன் தொடர்ச்சியாக மற்றொரு திருத்தமாக, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி மண்டலங்கள், தோல் தொழில் மற்றும் கடலோரத் தொழில் மண்டலங்கள் போன்றவற்றில் மேற்கொள்ளப்படும் கட்டுமானத் திட்டங்கள் பற்றியும் விரிவாக்கப் பணிகளுக்கும் சுற்றுச் சூழல் அனுமதி தேவை இல்லை என்று திருத்தியிருக்கிறது.
இதனால் என்ன ஆகும் என்றால், மக்களிடம் கருத்துக்கேட்கும் உரிமை முற்றிலும் மறுக்கப்படும். எந்த திட்டத்தையும் மக்கள் அனுமதியின்றி செயல்படுத்த முடியும். மேலும் தொழிற்சாலை, நிறுவனங்கள் தங்கள் அறிக்கையை அளிக்க வேண்டிய தேவை இருக்காது. செயல்பாடுகள் குறித்த அறிக்கை ஆண்டுக்கு ஒருமுறை கொடுத்தால் போதும் என்ற நிலைமை உருவாகும். இதனால் நிறுவனங்கள் அனுமதியுடன் சட்ட மீறலில் ஈடுபடும்.
மேலும், சுற்றுச் சூழலுக்குக் கேடு பயக்கும் திட்டங்கள் குறித்து சூழலியல் ஆர்வலர்கள், பொதுமக்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கங்கள் என எவரும் புகார் கூறவோ, கருத்துத் தெரிவிக்கவோ முடியாது. மத்திய அரசு தேவைப்பட்டால் விசாரணைக்குழு அமைத்தால் தான் கருத்துக்களை மக்கள் கூற முடியும்.
இதனால் தமிழகமும் மிகப் பெரிய அளவில் பாதிப்பை சந்திக்கும். குறிப்பாக காவிரியில் மேகேதாட்டு அணை, தேனி நியூட்ரினோ ஆய்வகம், சேலம் - சென்னை 8 வழிச்சாலை மற்றும் காவிரிப் படுகை பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் போன்றவற்றை செயல்படுத்திட இந்த சட்டம் உதவும். காடுகளில் வாழும் மக்கள் துரத்தியடிக்கப்படுவார்கள். இத்தகைய மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் சட்ட வரைவுக்குத் தான் தற்போது நாடுமுழுவதும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
Also Read
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!
-
”தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை” : அமைச்சர் கீதா ஜீவன்